Home இந்தியா செப் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – சசிகலா வாக்குமூலம்!

செப் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – சசிகலா வாக்குமூலம்!

1389
0
SHARE
Ad

சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அவ்விசாரணை ஆணையத்திடம் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை 55 பக்க பிரமாணப் பத்திரமாக அளித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதில் இருந்தே ஜெயலலிதா மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார். இதனால் அடிக்கடி அவரது சர்க்கரை அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.

2016, செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9.30 மணியளவில், போயஸ் கார்டன் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு மயக்கம் வந்தது. உதவிக்காக என்னை அழைத்தார்.

உடனடியாக அவரை நான் தாங்கிப் பிடித்து, மருத்துவர் சிவக்குமாரை அழைத்தேன். ஏற்கனவே மருத்துவர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அப்பல்லோவில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் ஜெயலலிதா அதை ஏற்கவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா மயக்கம் அடையவே, உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவசர ஊர்தி வர வழைக்கப்பட்டு, ஜெயலலிதாவை அதில் படுக்க வைத்து அப்பல்லோ கொண்டு சென்றோம்.

அவசர ஊர்தியில் போகும் போதே ஜெயலலிதாவுக்கு நினைவு திரும்பியது. பின்னர் அப்பல்லோவில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நலம் தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அதன் பின்னர், அவருக்கு அங்கு தொடர்ந்து மேற்சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.

எனினும், டிசம்பர் 4-ம் தேதி, மாலை 4.20 மணியளவில், ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரது நாக்கு ஒருபக்கமாக இழுத்து, பல்லைக்கடித்த படி சத்தம் போட்டார். உடனடியாக மருத்துவக் குழு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர்.நான் அதைப் பார்த்து மயங்கி விழுந்துவிட்டேன்.

இவ்வாறு சசிகலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

அப்பல்லோவில் ஜெயலலிதா சேர்க்கப்படுவதற்கு முன்னதாக அவருக்கு சிகிச்சையளித்து வந்த 21 மருத்துவர்களின் பட்டியலையும் சசிகலா சமர்ப்பித்திருக்கிறார்.

அவர்களிடம் விசாரணை நடத்தும் போது, ஜெயலலிதாவின் உடல்நிலையில் இருந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்த உண்மைகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.