வாஷிங்டன் – கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற அரசியல் பிரச்சார நிறுவனத்திடம், ஃபேஸ்புக் மில்லியன் கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டினால் ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 9 மில்லியன் டாலர்களை ஒரே நாளில் இழந்திருக்கிறது.
அமெரிக்க பொதுத்தேர்தலில், வாக்காளர்களுக்கு ஃபேஸ்புக் அளித்தத் தரவுகளின் மூலமாகத் தகவல்கள் அனுப்பப்பட்டு, நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெற்றி பெறச் செய்ததாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் பேசிக் கொள்வதைப் போன்ற காணொளி ஒன்று கசிந்ததையடுத்து, இந்த விவகாரம் உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்தது.
மலேசியா உள்பட பல நாடுகளுக்கு பொதுத்தேர்தல் பிரச்சாரங்களுக்கு கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் உதவியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதனிடையே, வாட்சாப் செயலியின் துணை நிறுவனர் பிரியான் ஆக்டான், ஃபேஸ்புக் செயலியை அழிக்கும்படி டுவிட்டரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
மேலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கை விசாரணை செய்ய இங்கிலாந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியிருக்கிறது.
அவர்கள் முன்னிலையில், இந்த விவகாரம் குறித்து மார்க் விளக்கமளிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், ஃபேஸ்புக்கு எதிரான இந்த திடீர் சர்ச்சையால், உலகச் சந்தையில் ஒரே நாளில் ஃபேஸ்புக் நிறுவனம் 9 மில்லியன் டாலர்களை இழந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.