Home நாடு தனது வயது குறித்த கலந்துரையாடலில் அதிரடியாக நுழைந்த மகாதீர்!

தனது வயது குறித்த கலந்துரையாடலில் அதிரடியாக நுழைந்த மகாதீர்!

1019
0
SHARE
Ad
“முகத்தைப் பார்த்துக் கூறுங்கள், நான் வயதானவனா?”

ஷா ஆலாம் – நேற்று வியாழக்கிழமை இங்குள்ள காராங்கிராப் மலாய் ஊடக நிறுவன வளாகத்தில் ‘சினார் ஹாரியான்’ மலாய் நாளிதழ் “93 வயதில் மகாதீர் பிரதமராகத் தகுதியானவரா?” என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

யாரும் எதிர்பாராத வண்ணம் அந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதில் கலந்து கொள்ள திடீரென மகாதீரும் அரங்கத்திற்குள் வந்தார். உடனே ஏற்பாட்டாளர்கள் அவரை மரியாதையாக அழைத்துச் சென்று முதலாவது முன்வரிசையில் அமரவைத்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மகாதீரை வரவேற்றனர். அவருடன் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா அலியும் வருகை தந்தார்.

#TamilSchoolmychoice

மகாதீர் வரும் வரையில் 93-வது வயதில் ஒருவர் இடைக்காலப் பிரதமராகச் சிறப்பாக செயல்பட முடியாது என தங்களின் வாதங்களை முன்வைத்த உரையாளர்கள், மகாதீர் வந்து அமர்ந்ததும், கொஞ்சம் அடக்கியே வாசித்தனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற்ற உரையாளர்களில் ஒரு மனோவியல் மருத்துவரும், ஒரு உடற்பயிற்சி நிபுணரும், அரசியல் ஆய்வாளர் ஒருவரும் அடங்குவர்.

நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்வதற்கு முன்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மகாதீர் “துன் மகாதீர் பிரதமராவதற்கு முதுமையானவரா என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. நானும் கலந்து கொள்கிறேன். எனது முகத்தைப் பார்த்துக் கூறுங்கள்” என்று பதிவிட்டார்.

 

பின்னர் கலந்துரையாடலில் ஏற்பாட்டாளர் மகாதீரைப் பார்த்து “நீங்கள் பிரதமர் பதவியிலிருந்து விலகிவிட்டு இப்போது மீண்டும் பிரதமராவேன் என்று கூறுவது எதனால்?” என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த மகாதீர், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் தன்மீது நம்பிக்கை வைத்து தன்னைப் பிரதமராக முன்மொழிந்த காரணத்தால்தான் தான் அந்த நியமனத்திற்கு ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.

மேலும் நஜிப்பை பதவியில் இருந்து வீழ்த்துவதற்காகத்தான் தான் மீண்டும் அரசியலில் குதிப்பதாகவும் மகாதீர் கூறினார். 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த அனுபவம் வாய்ந்தவன் என்பதால்தான் எதிர்க்கட்சிகள் தன்னைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பதாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.

“வயது என்பதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று எண்ணிக்கையை வைத்து கணக்கிடுவது. மற்றொன்று உடல் ரீதியான முதுமையை வைத்து கணக்கிடுவது. ஒருசிலர் தங்களின் 50-வது வயதிலேயே முதுமையை அடைந்து விடுவர். பல நோய்களுக்கு ஆளாகிவிடுவர். ஆனால் நான் இன்னும் முதுமையை அடைந்துவிடவில்லை. மறதிநோய் போன்றவையும் எனக்கில்லை” என்றும் மகாதீர் தனது பதிலில் தெரிவித்தார்.