Home நாடு பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய ‘டத்தினுக்கு’ 8 ஆண்டுகள் சிறை!

பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய ‘டத்தினுக்கு’ 8 ஆண்டுகள் சிறை!

995
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில், டத்தின் ரோசிடா முகமது அலிக்கு (வயது 44) இன்று வியாழக்கிழமை 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது உயர்நீதிமன்றம்.

இத்தீர்ப்பு, இதற்கு முன் இவ்வழக்கில் அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு நேர் எதிராகும். இவ்வழக்கை விசாரணை செய்த அமர்வு நீதிமன்றம், 20,000 ரிங்கிட் அபராதத்துடன், ரோசிடா 5 ஆண்டுகளுக்கு நன்னடத்தை ஒப்பந்தப்படி நடக்க வேண்டுமென தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அரசு தரப்பு, உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டின் படி, விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், தற்போது 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ரோசிடாவின் தண்டனைக் காலம் இன்று முதல் தொடங்குகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு, ஜூன் 21-ம் தேதி, முத்தியாரா டாமன்சாராவில், தனது 21 வயது பணிப்பெண் சுயந்தி சுட்ரின்சோவை, சமையல் கத்தி, இரும்புத் துடைப்பான் மற்றும் குடை ஆகியவற்றால் ரோசிடா தாக்கியிருக்கிறார். இதில் சுயந்தியின் கண், கை, கால்கள் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

முதலில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கு, பின்னர் கடுமையான காயங்களின் அடிப்படையில், குற்றவியல் சட்டம், பிரிவு 326-ன் படி, ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாக மாற்றியமைக்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணையில், தனது குற்றத்தை ரோசிடா ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில், இன்று தீர்ப்பை அறிந்தவுடன், ரோசிடா மிகவும் அமைதியாகக் காணப்பட்டார்.

தீர்ப்பை ஒத்தி வைக்கும் படி, ரோசிடா தரப்பு வழக்கறிஞர் முறையீடு செய்யவே, அதனை நீதிபதி டத்தோ துன் அப்துல் மஸ்ஜித் துன் ஹம்சா நிராகரித்து, இன்று வியாழக்கிழமை முதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட தனது கடப்பிதழை தனது கட்சிக்காரர் வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்றும், அதற்கான கூடுதல் விதிமுறைகளை கடைபிடிக்கத் தயாராக இருக்கிறார் என்றும் ரோசிடா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.