Home நாடு இடைநீக்கத்தை மீறி நாடாளுமன்றத்தில் கிட் சியாங் – அவையில் மீண்டும் சலசலப்பு!

இடைநீக்கத்தை மீறி நாடாளுமன்றத்தில் கிட் சியாங் – அவையில் மீண்டும் சலசலப்பு!

932
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தொகுதி எல்லை சீர்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது ஜசெக மூத்தத் தலைவரும், கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அப்போது அவைத்தலைவர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா, பலமுறை லிம் கிட் சியாங்கை இருக்கையில் அமரும் படி கூறியும், அவர் கேட்காததால், 6 மாதங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யும் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.

இந்நிலையில், தான் நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேனா? இல்லையா? என்பது உறுதியாகத் தெரியவில்லை என லிம் கிட் சியாங் நேற்று புதன்கிழமை மாலை கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கு மீண்டும் லிம் கிட் சியாங் வருகை புரிந்திருப்பதாக ஸ்டார் இணையதளம் கூறுகின்றது.

மேலும், லிம் கிட் சியாங்கை நாடாளுமன்றத்தில் பார்த்த, தேசிய முன்னணியைச் சேர்ந்த செத்தியு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சே முகமது சுல்கிப்ளி ஜோசுவா, அது குறித்து அவைத்தலைவரிடம் புகார் அளித்திருக்கிறார்.

“டான்ஸ்ரீ அவைத்தலைவரே, உத்தரவுப்படி, இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர், அதன் காலம் முடியும் வரை (நாடாளுமன்றக் கூட்டத்தில்) பங்கேற்கக் கூடாது. ஆனால் நான் கேலாங் பாத்தாவை இங்கே பார்த்தேன். அவர் ஒரு மூத்தத் தலைவர். அவருக்கு இது நன்றாகவே தெரியும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்” என்று சே முகமது கூறியிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த பண்டிகார் அமின் மூலியா, “நாடாளுமன்றத்தில் நான் அவரைப் பார்க்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், சே முகமதுவின் புகாரைக் கண்டித்து, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் அவையை அமைதி காக்கும் படி கூறிய பண்டிகார், “நான் சொல்வதை யாரும் இங்கே கேட்க மறுக்கிறீர்கள். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்.

“நான் அவரைப் பார்க்கவில்லை என்று கூறியதற்குக் காரணம், ஒருவேளை மீண்டும் அவரை வெளியே போகும் படி நான் கூறினால், அதில் என்ன தான் அர்த்தம் இருக்கிறது?” என்று எரிச்சலுடன் தெரிவித்திருக்கிறார்.