Home நாடு “நான் இடைநீக்கம் செய்யப்பட்டேனா இல்லையா?” கிட் சியாங் கேள்வி

“நான் இடைநீக்கம் செய்யப்பட்டேனா இல்லையா?” கிட் சியாங் கேள்வி

808
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தீப்பொறிகள் பறக்கும் அளவுக்கு இன்று பரபரப்பான விவாதங்கள் அரங்கேறிய நாடாளுமன்றத்தில், ஒரு கட்டத்தில் அவைத் தலைவரின் உத்தரவுக்கு ஏற்ப அமர மறுத்த ஜசெகவின் மூத்த தலைவர்  லிம் கிட் சியாங், நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றப்படுவதாக அவைத் தலைவர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கான அமைச்சர் அசாலினா ஒத்மான் சைட், லிம் கிட் சியாங்கை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். ஆனால் அந்தத் தீர்மானம் மீது பண்டிகார் வாக்கெடுப்பு எதனையும் நடத்தவில்லை.

லிம் கிட் சியாங்கும் தொடர்ந்து நாடாளுமன்ற அவையில் அமர்ந்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதனால் அந்த தீர்மானம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால், தொகுதி எல்லைகள் மீதான சீர்திருத்த மசோதா சமர்ப்பிக்கப்பட்டபோது, வாக்களித்த தனது வாக்கு நிராகரிக்கப்பட்டதாக லிம் கிட் சியாங் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து “நான் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் அந்தரத்தில் இருப்பதைப் போல் உணர்கிறேன்” என லிம் கிட் சியாங் கூறியிருக்கிறார்.

“நான் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தால் தொடர்ந்து அவையில் அமர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் மதிய உணவு இடைவேளைக்கு முன்னரும் பின்னரும் நான் நாடாளுமன்றத்தில்தான் அமர்ந்திருந்தேன். துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி பேசும்போதுகூட ஒருமுறை நான் இடைமறித்துப் பேசினேன். எனவே நான் இடைநீக்கம் செய்யப்படவில்லை என்றால், எனது வாக்கும் நிராகரிக்கப்படாமல் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்” என நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது லிம் கிட் சியாங் கூறினார்.

தொகுதி எல்லை சீர்திருத்தங்கள் மீதான விவாதங்கள் கடுமையான மோதல்களுக்கிடையில் அரங்கேறிக் கொண்டிருந்தபோது இன்று புதன்கிழமை காலை லிம் கிட் சியாங்கை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னரும் அவர் அவையிலேயே அமர்ந்திருந்தார். வெளியேற மறுத்தார்.

அவைத் தலைவர் கிட் சியாங் அவையிலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக சிறிய இடைவெளி அவகாசம் வழங்குவதாகவும் அவைத் தலைவர் தெரிவித்திருந்தார்.

பின்னர் தொகுதி எல்லை சீர்திருத்தங்கள் மீதான மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக 129 பேரும் எதிராக 80 பேரும் வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் 81 வாக்குகள் எதிர்த்து வாக்களிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெக அமைப்புச் செயலாளருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

“வாக்குகளை எண்ணும்போது லிம் கிட் சியாங்கின் வாக்கை எண்ணக் கூடாது என அவைத் தலைவர் தனக்கு உத்தரவிட்டிருப்பதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் எனக்குத் தெரிவித்தார்” என்றும் அந்தோணி லோக் இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் இணைய ஊடகம் போன்ற சில ஊடகங்கள் லிம் கிட் சியாங் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கின்றன.