Home நாடு சபா தொகுதிகளின் எல்லை சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதது ஏன்?

சபா தொகுதிகளின் எல்லை சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதது ஏன்?

1002
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மேற்கு மலேசியாவுக்கான தொகுதிகளின் எல்லை சீர்திருத்தங்கள் மீதான தீர்மானத்தைத் தொடர்ந்து எழுந்திருக்கும் மற்றொரு சர்ச்சை இதே போன்ற சீர்திருத்தங்கள் சபாவில் செய்யப்பட்டிருந்தும் அது குறித்த மசோதா ஏன் இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது என்பதுதான்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த கேள்வியை எழுப்பி வருகின்றன.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பிரதமர் அரசியல் சாசனத்தின்படிதான் நடந்து கொள்கிறார் என்றும் அதன் காரணமாகத்தான் சபா தொகுதிகளின் எல்லைகள் மீதான சீர்திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணையம் தொகுதிகள் மீதான எல்லைகள் சீர்திருத்தங்களை பிரதமரிடம் சமர்ப்பித்தவுடன் அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதா இல்லையா என்பதை பிரதமர்தான் முடிவு செய்வார் என அரசியல் சாசனம் கூறுகிறது.

அரசியல் சாசனத்தில் 13-வது தொகுதியின் 9-வது பிரிவு இவ்வாறு குறிப்பிடுகிறது.

இதன் தொடர்பில் சபா வாரிசான் தலைவரும் அம்னோவின் முன்னாள் உதவித் தலைவருமான ஷாபி அப்டால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே சாஹிட் இவ்வாறு கூறினார்.

சபா சட்டமன்றத் தொகுதிகள் புதிய சீர்திருத்தங்களின்படி தற்போது 60 எண்ணிக்கையிலிருந்து 73 ஆக உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த சீர்திருத்தங்கள் சபா சட்டமன்றத்தில் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறாத காரணத்தால் அமுலுக்கு வரவில்லை.

சபாவின் இந்த தொகுதி எல்லை சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால் அவை ஷாபி அப்டாலுக்கு சாதகமாக முடியலாம் என்ற அச்சத்தில் இவை இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் சபா மாநில அரசாங்கத்தின் செயலாளர் சுகார்த்தி வாக்கிமான் நேற்று புதன்கிழமை விடுத்த அறிக்கை ஒன்றில், சபாவில் புதிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டவுடன் அதையும் சேர்த்து, கூடுதல் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கான சீர்திருத்தங்களை பின்னர் வேறொரு சமயத்தில் சமர்ப்பிப்போம் எனத் தெரிவித்திருக்கிறார்.