Home நாடு சுங்கை சிப்புட் போட்டியிலிருந்து மைக்கல் ஜெயகுமார் விலகத் தயார்

சுங்கை சிப்புட் போட்டியிலிருந்து மைக்கல் ஜெயகுமார் விலகத் தயார்

1054
0
SHARE
Ad
மைக்கல் ஜெயகுமார்

சுங்கை சிப்புட் – 2008 முதல் இரண்டு தவணைகளாக சுங்கை சிப்புட் தொகுதியில் வெற்றி பெற்று வந்திருக்கும் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா கட்சியின் (பிஎஸ்எம்) டாக்டர் மைக்கல் ஜெயகுமார், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் அந்தத் தொகுதியைத் தற்காக்கப் போவதாக அறிவித்திருந்தாலும், தற்போது அங்கு போட்டியிடாமல் விலகிக் கொள்ள ஆலோசித்து வருவதாக அறிவித்துள்ளார்.

தங்களின் சொந்தச் சின்னத்தில் போட்டியிடவும், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்படவும் பிஎஸ்எம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. எனினும் அதன் கோரிக்கைகள் பக்காத்தான் தலைமைத்துவத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து சுங்கை சிப்புட் மற்றும் கேமரன் மலை தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என பிஎஸ்எம் அறிவித்தது. ஆனால், தற்போது அனைத்து பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளும் ஒரே பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிடும் நிலையில் பிஎஸ்எம் தொகுதி சுங்கை சிப்புட் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டால், அதன் மூலம் அந்தத் தொகுதியை தேசிய முன்னணியிடம் இழக்கலாம் என்பதால், அங்கு போட்டியிலிருந்து விலகிக் கொள்ள உத்தேசித்து வருவதாக ஜெயகுமார் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“சுங்கை சிப்புட்டில் மீண்டும் நின்று, அதன் மூலம் வாக்குகளைப் பிரித்து, தேசிய முன்னணி இந்தத் தொகுதியை சுலபமாக வெல்வதற்கு நாம் காரணமாக இருக்க வேண்டுமா என்ற கேள்வியைப் பல உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர். பிஎஸ்எம், பக்காத்தான் இடையில் ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் இக்கட்டான நிலைமைக்கு வாக்காளர்களைத் தள்ள நாங்கள் விரும்பவில்லை. எங்கள் வேட்பாளர்தான் சிறந்தவர் என நாங்கள் கருதினாலும், போட்டியிலிருந்து விலகிக் கொள்ள நாங்கள் விவாதித்து வருகிறோம். பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட்டில் பக்காத்தான் தோல்வியடைந்து, அதன்மூலம் அந்தத் தொகுதி தேசிய முன்னணிக்கு மீண்டும் செல்ல நாங்கள் காரணமானோம் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காக நாங்கள் விரும்பவில்லை” என மைக்கல் ஜெயகுமார் கூறியதாக பிரி மலேசியா டுடே இணைய ஊடகம் தெரிவித்துள்ளது.

சுங்கை சிப்புட்டைத் தொடர்ந்து கேமரன் மலையிலும் பிஎஸ்எம் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.