கோலாலம்பூர் – மலேசியாவில் புதிதாக இயற்றப்பட்டிருக்கும் பொய் செய்திகள் சட்டம் 2018-ன் கீழ், டேனிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் முறையாக தண்டனை வழங்கப்பட்டது.
அண்மையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் கொல்லப்பட்டது தொடர்பாக, சாலா சலீம் சாலே சுலைமான் என்ற அந்நபர் காவல்துறைக்கு எதிராக தனது யூடியூப்பில் கருத்துத் தெரிவித்ததால், கைது செய்யப்பட்டு சைபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை சைபர் நீதிமன்றத்தில் சாலா சலீம் சாலே சுலைமான் பேசிய காணொளி ஒளிபரப்பட்டது.
பாலஸ்தீன நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போது, தான் அவருடன் இருந்ததாகவும், சம்பவம் நடந்தது குறித்து காவல்துறைக்கும், அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்து 50 நிமிடங்களுக்குப் பிறகு தான் அவர்கள் வந்து சேர்ந்ததாகவும் அக்காணொளியில் சாலா தெரிவித்திருக்கிறார்.
எனினும், காவல்துறைத் தரப்பில் தங்களுக்குத் தகவல் கிடைத்த 10 நிமிடத்தில் அங்கு சென்றுவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சாலா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 1 வார சிறைத் தண்டனையும், 10,000 ரிங்கிட் அபராதமும் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது.
மலேசியாவில் பொய் செய்தி சட்டம் 2018, பிரிவு 4 (1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை பெற்ற முதல் நபர் சாலா ஆவார். இச்சட்டத்தின் படி, குற்றவாளிகளுக்கு 6 வருட சிறைத் தண்டனையும், 500,000 ரிங்கிட் வரையில் அபராதமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.