Home தேர்தல்-14 “விமானம் பாதை மாறிப் போயிருக்கும்” – மகாதீர் மீண்டும் குற்றச்சாட்டு!

“விமானம் பாதை மாறிப் போயிருக்கும்” – மகாதீர் மீண்டும் குற்றச்சாட்டு!

1113
0
SHARE
Ad

லங்காவி – தனது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டவுடன், அந்த விமான நிறுவனம் உடனடியாக மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்ததாகக் கூறப்படுவதை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது மறுத்திருக்கிறார்.

விஸ்தாஜெட் இண்டர்நேஷனல் என்ற அந்நிறுவனம், தங்களது விமானத்தில் நாசவேலை நடந்திருப்பதை மறுத்திருப்பதோடு, மகாதீருக்கு உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து கொடுத்ததாக அறிக்கை விடுத்திருந்தது.

அதனை நேற்று திங்கட்கிழமை மறுத்து விளக்கமளித்திருக்கும் மகாதீர், “மற்றொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுவது முட்டாள்தனமானது. ஏனென்றால், அந்த விமானத்தில் நான் பயணிக்க முடியாது எனத் தெரிந்தவுடன், தனியார் விமானங்கள் வைத்திருக்கும் எனது நண்பர்களிடமிருந்து வேறு விமானம் பெற முயற்சி செய்தேன்.

#TamilSchoolmychoice

“வழக்கமாக அந்த நண்பர்களிடம் தான் விமானங்களை வாடகைக்கு எடுத்து பயணம் செய்வேன். ஆனால் இந்த முறை அவர்கள் எனக்கு விமானம் தருவதற்கு மறுத்துவிட்டனர். அதில் ஒரு நண்பர் தனக்கு மிகவும் நெருக்கடி கொடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

“அதன் பின்னர் சிங்கப்பூருக்கு தனியார் விமானங்களை வழங்கும் நண்பர் ஒருவரிடமிருந்து மாற்று விமானம் கிடைத்தது” என மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, மகாதீரின் விமானத்தில் நாசவேலை இல்லை, வழக்கமான தொழில்நுட்பக் கோளாறு தான் என சிஏஏஎம் (மலேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரம்) வெளியிட்டிருக்கும் அறிக்கையையும் மகாதீர் மறுத்திருக்கிறார்.

“அது ஒரு மிகப் பெரிய பிரச்சினை. காரணம், அதனால் விமானம் புறப்படும் போதோ அல்லது தரையிறங்கும் போதோ பாதை மாற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதிருஷ்டவசமாக விமானம் புறப்படுவதற்கு முன், விமானி (முன்சக்கரத்தில் ஏற்பட்ட) கசிவைக் கண்டறிந்து, இந்த நிலையில் விமானத்தை இயக்க முடியாது எனத் தெரிவித்தார்” என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “நான் தனியார் விமானங்களில் ஆயிரம் முறை பயணித்திருக்கிறேன். இது போன்ற ஒரு கோளாறை நான் கண்டதே இல்லை. இப்படி முன்சக்கரத்தில் மோசமான சேதத்தைக் காண்பது இது தான் முதல்முறை. வழக்கமாக எஞ்சினில் ஏதாவது கோளாறு இருக்கும் அதனை உடனடியாக சரி செய்து விடுவார்கள். ஆனால் முன்சக்கரத்தில் இப்படி ஒரு கோளாறு ஏற்பட வாய்ப்பே இல்லை” என்றும் லங்காவியில் நேற்று திங்கட்கிழமை மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

லங்காவியில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை தனியார் விமானம் ஒன்றில் மகாதீர் பயணிக்கச் சென்ற போது, அவ்விமானத்தின் முன்சக்கரத்தில் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

தான் லங்காவியில் வேட்புமனுத் தாக்கல் செய்யக் கூடாது என்பதற்காக சில வேண்டுமென்ற இந்த நாசவேலையைச் செய்திருப்பதாக மகாதீர் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.