Home தேர்தல்-14 சுங்கை பூலோ: “இந்த முறை வெற்றி பெறுவேன்” – பிரச்சாரங்களில் பிரகாஷ் ராவ் முழக்கம்

சுங்கை பூலோ: “இந்த முறை வெற்றி பெறுவேன்” – பிரச்சாரங்களில் பிரகாஷ் ராவ் முழக்கம்

1252
0
SHARE
Ad
பண்டார் பாரு சுங்கை பூலோ வட்டார இந்தியர்க்களிடையே உரையாற்றும் பிரகாஷ் ராவ்

சுங்கை பூலோ – வேட்புமனுத் தாக்கல் முடிந்த மறுநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 29-ஆம் தேதி, கோலாலம்பூருக்கு அருகிலிருக்கும் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியை ஒரு சுற்று சுற்றி வந்தபோது, அங்கு தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகாவின் வேட்பாளர் பிரகாஷ் ராவ் கலந்து கொண்ட இரண்டு பிரச்சாரக் கூட்டங்களில் அவரது பிரச்சார வேகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிரகாஷ் ராவின் அந்த இரண்டு கூட்டங்களும் இந்தியர்கள் அதிகம் வாழும் வட்டாரங்களில் நடத்தப்பட்டதால், அந்தக் கூட்டங்களில் இந்தியர்கள்தான் பெரும்பான்மையாகக் கலந்து கொண்டார்கள்.

தெளிவான, சரளமான, தமிழ் நடையில் – கூட்டங்களில் கலந்து கொள்ளும் சாதாரண பொதுமக்களை- வாக்காளர்களை சென்றடையும் வண்ணம் அவர்களுக்குப் புரியும் வண்ணம் கருத்துகளை ஆணித்தரமாக முன்னெடுத்து வைக்கிறார் பிரகாஷ் ராவ். அதே மொழி ஆளுமையோடு மலாய் மொழியிலும் தனது கருத்துகளை எடுத்துக் கூறுகிறார்.

ஆசிரியப் பணியின் அனுபவங்கள் கைகொடுக்கின்றன

#TamilSchoolmychoice

பல்லாண்டு காலம் அவர் ஆற்றிய ஆசிரியப் பணியின் அனுபவங்கள் அவரது பிரச்சாரங்களில் அவருக்கு கைகொடுப்பதை, துணை நிற்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. செல்லுமிடமெல்லாம் அவரை ‘செகு’ (Cikgu) – (மலாய் மொழியில் ஆசிரியர் என்று பொருள்) என்றுதான் அழைக்கிறார்கள்.

அதுமட்டமல்லாமல், நாடு முழுமையிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பட்டதாரிகளாக உருவாக்கிக் காட்டிய ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநராகவும் இருப்பதால், அதன் காரணமாக, பல்லாண்டுகாலமாக கல்வி தொடர்பான உரைகளை மாணவர்களிடையே வழங்கி வந்திருப்பதால், இந்திய சமுதாயத்திற்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு புரிய வைப்பதோடு, கல்விக்காக தான் வழங்கியிருக்கும் பங்களிப்பையும் அவரால் எளிதாக மக்களின் மனங்களுக்குள் தனது கல்வி சம்பந்தமான கருத்துகளின் மூலம்  கடத்திச் செல்ல முடிகிறது.

இரண்டு தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவராசா தொகுதி பக்கமே வருவதில்லை, அதிகமாக மக்களைச் சந்திப்பதில்லை, வாக்காளர்களுடன் தொடர்புகள் வைத்துக் கொள்வதில்லை என்ற குறைபாடுகள் மக்களிடையே இருப்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார் பிரகாஷ் ராவ்.

அதனை அவ்வப்போது, நாசூக்காக தனது பிரச்சாரங்களில், சிவராசாவின் பெயரைச் சொல்லாமலேயே கடுமையாகச் சாடுகிறார் பிரகாஷ் ராவ்.

பிரகாஷ் ராவ் பலம் – 3 ஆண்டு கால உழைப்பு

பிரகாஷ் ராவுக்கு இருக்கும் மற்றொரு பலம் – கடந்த 2013 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும், தொடர்ந்து தொகுதி மக்களோடும், இங்குள்ள மஇகா தொகுதி கிளைகளோடும் அணுக்கமான தொடர்புகளை வளர்த்துக் கொண்டு வந்திருப்பது!

கடந்த 3 ஆண்டுகளாக தனது ஆற்றலையும் உழைப்பையும் அவர் சுங்கை பூலோவில் அதிகம் கொட்டியிருப்பதால், இங்குள்ள வாக்காளர்கள் குறிப்பாக இந்தியர்கள் அவரை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அத்தகைய அவரது உழைப்புதான் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவையும் கவர்ந்து, பிரகாஷ் ராவுக்கே மீண்டும் சுங்கை பூலோ தொகுதியை வழங்கும் முடிவை எடுக்க வைத்தது என்கின்றன மஇகா வட்டாரங்கள்.

பாயா ஜெராஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோ செய்ன் இஸ்மா பின் இஸ்மாயில்

ஆனால், சுங்கை பூலோவில் இரண்டாவது சுற்றில் சிவராசாவை வீழ்த்துவதற்கு இந்தியர்களின் ஆதரவு மட்டும் போதாது. மலாய்க்காரர்களின் ஆதரவும் பெருமளவில் தேவைப்படுகிறது. காரணம் 66 விழுக்காடு வாக்காளர்களாக இருப்பது அவர்கள்தான்.

அந்த மலாய் ஆதரவை வழங்கும் விதத்தில், சுங்கை பூலோ தொகுதியின் கீழ் வரும் பாயா ஜெராஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் சுங்கை பூலோ அம்னோ தொகுதியின் தலைவர் டத்தோ செய்ன் இஸ்மா பின் இஸ்மாயில் (ZEIN ISMA BIN ISMAIL).

சுங்கை பூலோ தொகுதியின் கீழ் இரண்டு சட்டமன்றங்களில் மற்றொன்றான கோத்தா டாமன்சாராவிலும் அம்னோவே போட்டியிடுகிறது. ஹலிமாதோன் சாடியா பிந்தி போஹான் (HALIMATON SAADIAH BINTI BOHAN) இங்கு போட்டியிடுகிறார்.

மேலும் 11 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர். தனது 3 ஆண்டு கால உழைப்பின் மூலம் அவர்களில் பெரும்பான்மையோரின் வாக்கைக் கவர முடியும் எனவும் பிரகாஷ் ராவ் கருதுகிறார்.

அதனால்தான், தான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் “இந்த முறை உங்களின் ஆதரவோடு சுங்கை பூலோ தொகுதியில் வென்று காட்டுகிறேன்” என்று முழங்குகிறார்.

மே 9-ஆம் தேதி முடிவுகளும் அதையே பிரதிபலிக்குமா?

-இரா.முத்தரசன்