Home நாடு ரமணன் சொத்து அறிவிப்பில் குற்றம் இருப்பின், வேட்புமனு மீட்டுக் கொள்ளப்படும் – அன்வார் உறுதி

ரமணன் சொத்து அறிவிப்பில் குற்றம் இருப்பின், வேட்புமனு மீட்டுக் கொள்ளப்படும் – அன்வார் உறுதி

477
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் குற்றவியல் சட்டங்களை ரமணன் மீறியிருப்பதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அவரின் வேட்புமனுவை மீட்டுக் கொள்ள பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி தயங்காது என அன்வார் இப்ராகிம் கூறினார்

எல்லா வேட்பாளர்கள் குறித்தும் ஊழல் தடுப்பு ஆணையம், காவல் துறை வர்த்தகக் குற்றவியல் பிரிவு ஆகிய அமைப்புகளிடம் இருந்து தான் விளக்கங்கள் பெற்றுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

மக்களின் கண்ணோட்டம் என்பது வேறு, உண்மை என்பது வேறு என்றும் அன்வார் குறிப்பிட்டார். ரமணனின் ஒரே குற்றமாகக் கருதப்படுவது அவர் முன்பு மஇகாவில் இருந்தார் என்பதுதான் எனவும் அன்வார் கிண்டலாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆதாரங்கள் இருந்தால் அதைக் காட்டுமாறும் அன்வார் கேட்டுக் கொண்டார். 5.5 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டு ஒன்றில் ரமணனுக்குத் தொடர்பிருப்பதாக வதந்திகள் உலவினாலும் அது குறித்த ஆதாரங்கள் இல்லை என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

ஏழு முனைப் போட்டியில் ரமணன் சுங்கை பூலோ தொகுதியில் வெற்றி பெறுவார் எனத் தான் நம்புவதாகவும் அன்வார் மேலும் தெரிவித்தார்.

சுங்கை பூலோ தொகுதியில் கடுமையான போராட்டம்

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ரமணன்

நாட்டில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக உருவாகியுள்ளது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி. பிகேஆர் கட்சி சார்பில் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறார் டத்தோ ஆர்.ரமணன். மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர். டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு தேசியத் தலைவராக இருந்த காலத்தில் அந்தப் பொறுப்பை வகித்தார்.

அவரை எதிர்த்து சுகாதார அமைச்சராக இருந்த கைரி ஜமாலுடின் அம்னோவால் களமிறக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாகியிருக்கிறது இந்தத் தொகுதி.

பிகேஆர் வேட்பாளர்கள் தங்களின் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பதால், தனது சொத்து மதிப்பு 63.5 மில்லியன் ரிங்கிட் என அறிவித்திருக்கிறார் ரமணன்.

அதில் 23 மில்லியன் ரொக்கப் பணம் என்றும் 4 மில்லியன் நகைகள் என்றும் ரமணன் தெரிவித்திருக்கிறார்.

27 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிலச் சொத்துகள், 8.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வாகனங்கள், 3.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிறுவனப் பங்குகள் மற்றும் காப்புறுதி ஆகிய சொத்துகளையும் அவர் கொண்டிருக்கிறார்.

2.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடன் பாக்கியையும் அவர் வீட்டுக் கடன், கார் கடன், பற்று அட்டை (கிரெடிட் கார்ட்) போன்றவற்றுக்காகக் கொண்டிருக்கிறார்.

41-வயதான ரமணன் ஓர் இயந்திரவியல் பொறியியலாளர் ஆவார் (மெக்கானிகல் என்ஜினியர்). அவரை எதிர்த்துப் போட்டியிடும் கைரி ஜமாலுடின் இதுவரை தன் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை.