Home தேர்தல்-14 “ஆதரித்த சிகாமாட் மக்களை கைவிடக் கூடாது என்பதற்காக மீண்டும் போட்டியிடுகிறேன்” டாக்டர் சுப்ரா

“ஆதரித்த சிகாமாட் மக்களை கைவிடக் கூடாது என்பதற்காக மீண்டும் போட்டியிடுகிறேன்” டாக்டர் சுப்ரா

966
0
SHARE
Ad

சிகாமாட் – நேற்று திங்கட்கிழமை (30 ஏப்ரல் 2018) இரவு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ஜெமந்தா வட்டார இந்திய வாக்காளர்களிடையே உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் “கடந்த 3 தவணைகளாக சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் என்னை ஆதரித்துத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களை கைவிட்டு விடக் கூடாது என்ற நோக்கத்திலும், அவர்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றிக் கடனாகவும் மீண்டும் சிகாமாட் தொகுதியிலேயே போட்டியிட முன்வந்தேன்” என்று கூறினார்.

சிகாமாட்டிலுள்ள நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி மண்டபத்தில், கலைநிகழ்ச்சியோடு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திரண்டிருந்த இந்திய வாக்காளர்களிடையே உரையாற்றும்போது டாக்டர் சுப்ரா, மேற்கண்டவாறு கூறினார்.

2004 முதல் சிகாமாட் தொகுதியை வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் டாக்டர் சுப்ரா, நான்காவது தவணையாக இங்கு மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. பிகேஆர் கட்சியின் சந்தாரா குமார் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராகவும், கைருல் பாயிசி பாஸ் கட்சி வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

#TamilSchoolmychoice

“நான் மஇகாவின் தேசியத் தலைவர் என்ற முறையில், நினைத்திருந்தால் சிகாமாட்டை விடப் பாதுகாப்பான ஒரு தொகுதிக்கு சென்று அங்கு போட்டியிட்டிருக்க முடியும். ஆனால் எனது சொந்த சுயநலத்திற்காக அவ்வாறு செய்ய என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. கடந்த 3 தவணைகளாக சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக கடுமையான போட்டிகளுக்கிடையிலும் என்னைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், அமைச்சராகவும், மஇகா தேசியத் தலைவராகவும் நாடு முழுமையிலும் உள்ள இந்தியர்களுக்கு சேவையாற்ற எனக்கு சிகாமாட் மக்கள்தான் வாய்ப்பை வழங்கினர். கடந்த முறை கூட நெருக்கடியான போட்டிக்கிடையில்தான் சிகாமாட் மக்களின் ஆதரவோடு நான் வெற்றி பெற்றேன். அதனால்தான் இந்த முறை என்ன நடந்தாலும் சரி. என்னை ஆதரித்த சிகாமாட் வாக்காளர்களைக் கைவிட்டு விடக் கூடாது. அவர்களுக்கான எனது பணிகளைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கேயே போட்டியிட முடிவெடுத்து, உங்களின் ஆதரவையும் தேடி வந்திருக்கிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா தனதுரையில் கூறினார்.

சிகாமாட், ஜெமந்தா இந்தியர்களிடையே டாக்டர் சுப்ரா உரை நிகழ்த்துகிறார்

தனது உரையில், மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு தனது விடாமுயற்சிகளின் பலனாக எவ்வாறு புதிய நிலம் பெறப்பட்டது, இடமாற்றம் எப்படி காணப்பட்டது, தற்போது 2.1 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீட்டுடன் எவ்வாறு சிறந்த முறையில் அந்தப் பள்ளி செயல்படுகிறது என்பது போன்ற விவரங்களையும் டாக்டர் சுப்ரா எடுத்துரைத்தார்.

அனைத்து இன மக்களும் வழங்கி வரும் ஆதரவினால் மீண்டும் சிகாமாட் தொகுதியை வெல்ல முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.