Home தேர்தல்-14 2.1 மில்லியன் மானியத்தில், கணினி மையத்தோடு நவீனமயமான நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி

2.1 மில்லியன் மானியத்தில், கணினி மையத்தோடு நவீனமயமான நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி

1740
0
SHARE
Ad

சிகாமாட் – நாடு முழுமையிலும் நவீனமயமாக்கப்பட்டு, கல்வி கற்கும் வசதிகள், கல்விச் சூழலுக்கான மேம்பாடுகளுடன் செயல்பட்டு வரும் தமிழ்ப் பள்ளிகளின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் சிகாமாட் தேசிய வகை நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி எல்லா அம்சங்களிலும் தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது.

ஆனால், இந்த நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி இன்று இந்த நிலைமையை எவ்வாறு அடைந்தது என்பதை விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் அந்தப் பள்ளியின் ஆரம்ப கால வரலாற்றை சற்றே பின்னோக்கிப் பார்த்தாக வேண்டும்.

1946-இல் தோற்றம் கண்ட நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி

தேசிய வகை நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 1946 ஆம் ஆண்டு நாகப்பா தோட்ட நிர்வாகத்தினரால் தோற்றுவிக்கப்பட்டது. முதலில், பிள்ளைகளைப் பராமரிக்கும் இடமாகத்தான் செயல்பட்ட இப்பள்ளிக்கூடம் ஜெமிந்தா பட்டணத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இப்பள்ளியை அடைய தங்காக்-சிகாமட் செல்லும் செம்மண் சாலையில் 6 கிலோ மீட்டர் தூரமும் பயணிக்க வேண்டியிருந்தது.

#TamilSchoolmychoice

கால ஓட்டத்தில் இப்பள்ளியை ஜெமிந்தா பட்டணத்திற்கு மாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல முயற்சிகளுக்கிடையே மாணிக்க செட்டியார் இலவசமாக வழங்கிய நிலத்தில் புதிய பள்ளிக்கூடம் 2010-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இப்பள்ளிக்கூடம் 28 செப்டம்பர் 2011 அன்று தோட்டத்திலிருந்து பட்டணத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டது. அன்று முதல் இப்பள்ளிக்கூடம் தனது வழக்கமான கல்விப் பணிகளுடன் செயல்படத் தொடங்கியது.

நாடு முழுமையிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளை மறுசீரமைப்பதிலும், மேம்படுத்துவதிலும், தனிக் கவனம் செலுத்தி வரும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான நாகப்பா தோட்டத் தமிழ் பள்ளியின் மேம்பாடு குறித்தும் மேல் நடவடிக்கையில் இறங்கினார்.

அதைத் தொடர்ந்து சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் சுப்ராவின் முயற்சியால் அரசாங்கத்திடமிருந்து ஏறக்குறைய 2.1 மில்லியன் ரிங்கிட்  மானியம் பெற்றுத் தரப்பட்டது.

இந்த மானியத்தைக் கொண்டு நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஒரு பள்ளி மண்டபம் , இணைக் கட்டம், கணினி அறை, நூலகம், ஒவ்வொரு வகுப்பறையிலும் “ஸ்மார்ட் தொலைக்காட்சி” எனப்படும் விவேகத் திறன் தொலைக்காட்சி போன்ற பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆனந்தி பச்சைமுத்து

அதன் அடிப்படையில், நேற்று சனிக்கிழமை (28 ஏப்ரல் 2018) காலை 8.00 மணியளவில் இப்பள்ளியின் புதிதாக அமைக்கப்பட்ட கணினி வகுப்பறை கோலாகலமாகத் திறப்புவிழா கண்டது. அது மட்டுமல்லாமல், அறிவியல் கூடமும் மிக விரைவில் அமைக்கப்படவுள்ளது எனப் பள்ளி தலைமையாசிரியரும் பள்ளியின் வாரியத் தலைவரும் குறிப்பிட்டனர்.

“டத்தோ ஸ்ரீ ச. சுப்பிரமணியம் அவர்கள் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தாலும், அவர் வழங்கிய பங்களிப்பின் காரணமாகவும், இப்பள்ளிக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளும் சலுகைகளும் நிறைவாகவே வழங்கப்பட்டுள்ளன” என பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ஆனந்தி தெரிவித்தார்.

நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளியின் நிர்வாக வாரியத் தலைவர் சின்னசாமி ரவி

பள்ளியின் வாரியத் தலைவர் திரு சின்னசாமி ரவி குறிப்பிடுகையில், பள்ளி மேம்பாட்டுப் பணிகளுக்காக வழங்கப்பட்ட 2.1 மில்லியன் ரிங்கிட் நிதி டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்களது முழு முயற்சியால் மட்டுமே கிடைக்கப்பட்டது என்றும் இதன் வழி நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளிகியின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவர் பெரிதும் பங்காற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கான மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து சிறப்பான முறையில் தொடர வேண்டும் என்ற எங்களின் நல்ல நோக்கம் நிறைவேற, வருகின்ற பொதுத் தேர்தலிலும் டாக்டர் சுப்ரா வெற்றிப் பெற்று மீண்டும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தனது பணிகளையும், சேவைகளையும் தொடர வேண்டும்” என தமது விருப்பத்தையும் நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளியின் வாரியத் தலைவர் சின்னசாமி ரவி வெளிப்படுத்தியுள்ளார்.