கோலாலம்பூர் – கோல சிலாங்கூர் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத்தில் பிகேஆர் சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சிவமலர் கணபதி, நேற்று சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்ற போது, அவரது அடையாள அட்டையில் சிலாங்கூர் முகவரி இல்லை என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில், கடைசி நேரத்தில் அத்தொகுதியில் சிவமலருக்குப் பதிலாக ஜுவாய்ரியா சுல்கிப்ளி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கடைசி நேரத்தில் சிவமலர் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாமல் போனதால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், வேட்புமனுத் தாக்கலின் போது நடந்தது என்ன? என்பது குறித்து சிவமலர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“28-04-2018 காலை, என்னுடைய வேட்புமனு ஆவணங்களை எடுத்துக் கொண்டு கோல சிலாங்கூர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த வேட்புமனு மையத்திற்குச் சென்றேன். நேற்று காலை என்னுடைய வேட்புமனு ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, கோல சிலாங்கூர் நகராட்சி கவுன்சில் தலைவர் மற்றும் தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 10-த்திற்கும் மேற்பட்ட நிபுணர்கள் என்னுடைய ஆவணங்களை சரிபார்த்தனர். காலை 9.10 மணியளவில் என்னுடைய ஆவணங்களைச் சமர்ப்பித்தேன். 9.40 மணி வரையில் எல்லாம் சரியாக இருப்பதாகவே எனக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர், என்னுடைய மைகார்ட்டில் சிலாங்கூர் முகவரி இல்லை என்று என்னிடம் தெரிவித்தனர்.
“கடைசி நிமிடத்தில், தேர்தல் அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து, சிலாங்கூர் முகவரிக்கு எனது பெயரில் வந்த பயன்பாட்டு ரசீது (மின்சாரம் அல்லது தண்ணீர்) இருக்கும் பட்சத்தில் என்னால் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்தார். தேவையான ரசீது என்னிடம் இருந்தது என்றாலும், தேசிய முன்னணியிடம் அத்தொகுதியை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்திலும், நெருக்கடியான நிலையிலும், அத்தொகுதியில் ஜுவாய்ரியா சுல்கிப்ளி வேட்புமனுத் தாக்கல் செய்ய அவருக்கு உதவுவதாக முடிவெடுத்தேன். அதன் படி கட்சித் தலைவரிடமிருந்து அதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தைப் பெற்றுக் கொடுத்தேன். அப்படி ஒரு நிலையில், நேரம் தாழ்த்தாமல், தேசிய முன்னணியிடமிருந்து அத்தொகுதியை மீட்க வேண்டும் என்பதே முக்கியம் எனக் கருதி அதனைச் செய்தேன்.
“கடந்த ஆண்டுகளில், நான் காப்பாரில் சேவையாற்றிக் கொண்டிருந்தேன். அது ஒரு நாடாளுமன்றத் தொகுதி. அதற்கு மலேசிய முகவரி இருந்தால் மட்டும் போதும். உங்களில் சிலருக்குத் தெரியும், என்11 ஈஜோக் சட்டமன்றத்திற்கு என்னை மாற்றினார்கள், பின்னர் கடைசி நிமிடங்களில் என்10 புக்கிட் மெலாவத்தி வேட்பாளராக என்னை அறிவித்தனர். அங்கு போட்டியிடுவதற்கு உள்ளூர் முகவரி தேவை.
“நேற்று வேட்புமனுத் தாக்கலின் போது நடந்த சம்பவத்திற்கு நான் முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய ஆதரவாளர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போராட்டத்தில், தனிமனிதர்களை விட, தேசிய முன்னணியின் இரும்புப் பிடியில் இருந்து தேசத்தை மீட்க வேண்டும். நான் அனைவரும் ஜுவாய்ரியாவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். பக்காத்தான் ஹராப்பான் சார்பில் அவர் அந்தத் தொகுதியில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த ஓராண்டாக ஜுவாய்ரியா புக்கிட் மெலாவத்தி தொகுதி மக்களுக்காக உழைத்து வருகின்றார். அவர் வாக்களிக்கத் தகுதியானவர். நாம் வெற்றியடைவோம் நம்புங்கள்!” – இவ்வாறு சிவமலர் கணபதி தெரிவித்திருக்கிறார்.