Home தேர்தல்-14 “ஓட்டு தானே? போடுறோம்.. ஆனால்” – சந்தையில் தேமு வேட்பாளருக்கு நேர்ந்த கதி!

“ஓட்டு தானே? போடுறோம்.. ஆனால்” – சந்தையில் தேமு வேட்பாளருக்கு நேர்ந்த கதி!

1173
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்ததையடுத்து, வேட்பாளர்கள் அனைவரும் தமது தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களைச் சந்தித்துப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய முன்னணி மசீச கட்சியைச் சேர்ந்த செராஸ் தொகுதி வேட்பாளர் ஹெங் சின் ஈ, கோலாலம்பூர் சந்தைக்குச் சென்று அங்குள்ள வியாபாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.

அப்போது, பெண் ஒருவர் ஹெங் சின் ஈயிடம் கைகுலுக்கி, “கண்டிப்பா உங்களுக்கு ஆதரவு தெரிவிப்போம். ஆனால், தேசிய முன்னணி எதிர்க்கட்சி ஆகுறதுக்கு தான் எங்கள் ஆதரவு. ஒரு ஓட்டு கூட தேசிய முன்னணிக்கு விழாது” எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், ஹெங் சின் ஈ புன்னகை மாறாமல் அங்கிருந்து விடை பெற்றார்.

என்றாலும், இந்த சம்பவத்தை சிலர் காணொளியாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து தனது பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்திருக்கும் ஹெங், “ஒரு பெண் இன்னொரு பெண்ணை அவமதிப்பது சாகசமாகப் பார்க்கப்படுகிறதா? ஒரு சீனரை இன்னொரு சீனர் அவமதிப்பது வீரமாகப் பார்க்கப்படுகின்றதா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், தன்னை அவமதிப்பதற்காகவே சிலர் அந்தக் காணொளியைப் பதிவு செய்திருப்பதாகவும் ஹெங் குறிப்பிட்டிருக்கிறார்.

“என்னை சிக்க வைத்து, காணொளி எடுத்த அந்த நபருக்கு நன்றி. உங்களின் செயல் ஜசெகவின் கேலி மற்றும் வெறுப்பு கலாச்சாரத்திற்கு எதிராகப் போராட மேலும் எனக்கு வலிமையைத் தந்திருக்கிறது” என்றும் ஹெங் கூறியிருக்கிறார்.