கோலாலம்பூர் – பத்து நாடாளுமன்றத் தொகுதியில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கவில்லை என்றால், பத்து தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் தேசிய முன்னணியைச் சாராத மற்றொரு வேட்பாளருக்குத் தனது ஆதரவை வழங்கப் போவதாக பிகேஆர் கட்சியின் தியான் சுவா கூறியிருக்கிறார்.
எனினும் அந்த வேட்பாளர், பக்காத்தான் போராடும் மாற்றத்திற்கு ஆதரவு வழங்குபவராக இருக்க வேண்டும் என்றும் தியான் சுவா தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தியான் சுவா தொடுத்திருக்கும் வழக்கு நாளை புதன்கிழமை (2 மே 2018) அவசர வழக்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவிருக்கிறது.
அந்த வழக்கின் தீர்ப்பு தனக்கு சாதகமாக அமையவில்லை என்றால், கடைசி ஆயுதமாக, பத்து தொகுதியில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளருக்குத் தனது ஆதரவை வழங்கும் முடிவை எடுக்கப் போவதாக தியான் சுவா அறிவித்திருக்கிறார்.