கோலாலம்பூர் – வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக, பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.
கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யச் சென்ற பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, தேர்தல் அதிகாரி அன்வார் முகமது ஜாயினால் அனுமதி மறுக்கப்பட்டார்.
வழக்கு ஒன்றில் ஷா ஆலம் உயர்நீதிமன்றம் அவருக்கு 2000 ரிங்கிட் அபராதம் விதித்ததைச் சுட்டிக் காட்டிய தேர்தல் அதிகாரி, தியான் சுவா அதனால் வேட்புமனுத் தாக்கல் செய்யும் தகுதியை இழப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, பத்து தொகுதியில் தியான் சுவாவால் போட்டியிட முடியாமல் போனது.
இந்நிலையில், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தியான் சுவா, நீதிமன்றத்தில் முறையிடலாம் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா அறிவித்தார்.
இதனையடுத்து, தியான் சுவா இன்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி அன்வார் முகமது ஜாயினுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கிறார்.
இவ்வழக்கு வரும் மே 3-ம் தேதி, விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.