Home தேர்தல்-14 “இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்” : பத்து தொகுதியில் போட்டியிடும் 22 வயது இளைஞர் பிரபாகரன்!

“இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்” : பத்து தொகுதியில் போட்டியிடும் 22 வயது இளைஞர் பிரபாகரன்!

1596
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 22 வயது.. இன்றைய இளைஞர்களில் இந்த வயதைச் சேர்ந்த பெரும்பாலானோர் புதிதாகப் படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பிற்காக பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கலாம் அல்லது அடுத்து என்ன வேலைக்குப் போகலாம்? என யோசித்துக் கொண்டிருக்கலாம். பொறுப்பான பிள்ளைகள் சிலர் கிடைத்த வேலைக்குப் போய் குடும்ப பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கலாம்.

சிலர், வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கலாம்.. சிலர் இன்னும் விளையாட்டுத் தனமாகவே, கார் வேண்டும், ஐபோன் வேண்டும் என பெற்றோரை நச்சரித்துக் கொண்டிருக்கலாம். இப்படியாக 22 வயது ஒவ்வொருவருக்கும் வேறு வேறு மாதிரியான சிந்தனைகளைக் கொடுக்கிறது.

ஆனால், 22 வயதான ஓர் இந்திய இளைஞர், மிக முக்கியமான நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்து தொகுதியில், சுயேட்சை வேட்பாளராகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு, “இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இளைஞர்களே என்னோடு கைகோர்த்து நில்லுங்கள்” என தேர்தல் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

#TamilSchoolmychoice

ஆம்.. நம்பித் தான் ஆக வேண்டும். செந்துலைச் சேர்ந்த பிரபாகரன் எம் பரமேஸ்வரனுக்கு 22 வயது தான். செந்துல் ஸ்ரீதண்டாயுதபாணி பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்ற பிரபாகரன், பின்னர் மேக்ஸ்வெல் இடைநிலைப் பள்ளியில் தனது மேற்படிப்பை முடித்தவர்.

பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டில் ஆர்வமிக்கவராக இருந்த அவர், ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்து தனது தலைமைத்துவத்தை வளர்த்துக் கொண்டவர்.

தற்போது, சட்டம் பயிலும் மாணவரான பிரபாகரன், 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில் இளைஞர்களின் பிரதிநிதியாகப் போட்டியிடுகிறார்.

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் வேட்பாளரும், அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான தியான் சுவா, கடந்த சனிக்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய சென்ற போது, அவர் மீதிருந்த வழக்கு ஒன்றில் விதிக்கப்பட்ட 2000 ரிங்கிட் அபராதம் காரணமாக நிராகரிக்கப்பட்டார்.

இதனால் பக்காத்தான் சார்பில் அத்தொகுதியில் வேட்பாளர் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அது குறித்து தியான் சுவா தற்போது நீதிமன்றத்தில் முறையிடவிருக்கிறார்.

இந்நிலையில், அரசியல் வல்லுநர் கமாருல் ஜமான் யூசோப், சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கும் பிரபாகரனை, பிகேஆர் தமது பிரதிநிதியாக்கிக் கொள்ள வேண்டுமென பரிந்துரை செய்திருக்கிறார்.

ஆனால், தனக்கு பிகேஆரில் சேரும் திட்டம் இல்லை என்றும், அவ்வாறு பிகேஆர் தன்னை அனுகும் பட்சத்தில் தனது குழுவினர் மற்றும் ஆலோசகர்களிடம் கலந்தாலோசித்த பின்னரே முடிவு எடுக்க முடியும் என்றும் பிரபாகரன் எஃப்எம்டியிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, தான் பத்து நாடாளுமன்றத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் பிரதிநிதியாகக் குரல் கொடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன் என பிரபாகரன் கூறியிருக்கிறார்.

14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடும் மிகக் குறைந்த வயதுடைய வேட்பாளராக பிரபாகரன் கருதப்படுகின்றார்.

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் டாமினிக் லாவ் ஹோய் சாய், பாஸ் வேட்பாளர் அசார் பின் யாஹ்யா, சுயேட்சை வேட்பாளர் வி.எம். பஞ்சமூர்த்தி ஆகியோருடன் சுயேட்சை பிரபாகரன் போட்டியிடுவதால், அங்கு நான்கு முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.

வெற்றியோ? தோல்வியோ? அரசியல் என்பது வயதில் மூத்தவர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் தான் என்ற வகையில், வாக்களிக்கும் வயதில், வேட்பாளராகக் களமிறங்கும் இந்த இளைஞரின் துணிச்சலையும், சிந்தனையையும் பாராட்டி தான் ஆக வேண்டும்.

-ஃபீனிக்ஸ்தாசன்