கோலாலம்பூர் – கடந்த வாரம் மைபிபிபி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட டான்ஸ்ரீ கேவியஸ், மீண்டும் அக்கட்சியின் தலைவராக தான் பொறுப்பேற்பதாக இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறார்.
இது குறித்து நட்பு ஊடகங்களில் தகவல் தெரிவித்திருக்கும் கேவியஸ், தான் அளித்த ராஜினாமா கடிதம் முறையான மற்றும் சட்டப்பூர்வ உச்சமன்றக் குழுவிடம் சேராத காரணத்தால், அக்கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், சிலர் கட்சியை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும், எனவே தனது பொறுப்பு மற்றும் அதிகாரத்திற்குத் திரும்பி, கட்சியில் துடைத்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகவும் கேவியஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளையில், கட்சியில் ஒழுக்கத்தையும், ஒற்றுமையையும் கொண்டு வந்து, எதிர்காலத்தில் அழகான மற்றும் உண்மையான ஒரே மலேசியா கட்சியாக மைபிபிபி-யை மாற்றுவேன் என்றும் கேவியஸ் தெரிவித்திருக்கிறார்.