Home நாடு சுங்கை பூலோ பிகேஆர் வேட்பாளர் டத்தோ ரமணன் சொத்து மதிப்பு 63.5 மில்லியன்

சுங்கை பூலோ பிகேஆர் வேட்பாளர் டத்தோ ரமணன் சொத்து மதிப்பு 63.5 மில்லியன்

487
0
SHARE
Ad
டத்தோ ஆர்.ரமணன்

கோலாலம்பூர் : நாட்டில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக உருவாகியுள்ளது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி. பிகேஆர் கட்சி சார்பில் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறார் டத்தோ ஆர்.ரமணன். மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர். டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு தேசியத் தலைவராக இருந்த காலத்தில் அந்தப் பொறுப்பை வகித்தார்.

அவரை எதிர்த்து சுகாதார அமைச்சராக இருந்த கைரி ஜமாலுடின் அம்னோவால் களமிறக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாகியிருக்கிறது இந்தத் தொகுதி.

பிகேஆர் வேட்பாளர்கள் தங்களின் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பதால், தனது சொத்து மதிப்பு 63.5 மில்லியன் ரிங்கிட் என அறிவித்திருக்கிறார் ரமணன்.

#TamilSchoolmychoice

அதில் 23 மில்லியன் ரொக்கப் பணம் என்றும் 4 மில்லியன் நகைகள் என்றும் ரமணன் தெரிவித்திருக்கிறார்.

27 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிலச் சொத்துகள், 8.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வாகனங்கள், 3.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிறுவனப் பங்குகள் மற்றும் காப்புறுதி ஆகிய சொத்துகளையும் அவர் கொண்டிருக்கிறார்.

2.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடன் பாக்கியையும் அவர் வீட்டுக் கடன், கார் கடன், பற்று அட்டை (கிரெடிட் கார்ட்) போன்றவற்றுக்காகக் கொண்டிருக்கிறார்.

41-வயதான ரமணன் ஓர் இயந்திரவியல் பொறியியலாளர் ஆவார் (மெக்கானிகல் என்ஜினியர்). அவரை எதிர்த்துப் போட்டியிடும் கைரி ஜமாலுடின் இதுவரை தன் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை.