Home தேர்தல்-14 தொகுதி வலம்: சுங்கை சிப்புட் – பிளவுபடும் வாக்குகளால் வெற்றி மாலை விழப் போவது யாருக்கு?

தொகுதி வலம்: சுங்கை சிப்புட் – பிளவுபடும் வாக்குகளால் வெற்றி மாலை விழப் போவது யாருக்கு?

1471
0
SHARE
Ad

சுங்கை சிப்புட் – (14-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கி வரும் வேளையில், செல்லியல் வழங்கும் ‘தொகுதி வலம்’ கட்டுரைகளின் வரிசையில், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கான கள நிலவரத்தை நேரடியாகக் கண்டறிந்து தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை புதன்கிழமை மாலை (2 மே 2018) நாம் சென்றடைந்தபோது, அங்கு ஒரு பொது மண்டபத்தில் (அரினா சுங்கை சிப்புட்) ஏறத்தாழ ஆயிரம் பேர் குழுமியிருந்ததைக் காண முடிந்தது.

எந்தக் கட்சியின் வேட்பாளர் பிரச்சாரம் செய்கிறார் என்பதைக் காண கூட்டத்தில் நுழைந்து அமர்ந்தபோது, நாம் ஆச்சரியப்படும் அளவில் அங்கு பேசிக் கொண்டிருந்தது, 1எம்டிபி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா.

சுங்கை சிப்புட்டில் 1 எம்டிபி குறித்த விளக்கக் கூட்டத்தில் அருள் கந்தா
#TamilSchoolmychoice

ஒருபுறத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் நாடு முழுமையிலும் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு புறத்தில் ஊர் ஊராக சென்று 1எம்டிபி தொடர்பான விவகாரங்கள் குறித்துத் தனது விளக்கங்களை வழங்கி வருகிறார் அருள் கந்தா. அந்த வரிசையில்தான் அவர் நேற்று புதன்கிழமை சுங்கை சிப்புட்டில் நடந்த “நாட்டின் நடப்பு விவகாரங்கள்” என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது தரப்பு வாதங்களையும், விளக்கங்களையும் வழங்கினார் அருள் கந்தா.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் ‘ஜாலினான் ராயாட்’ (Jalinan Rakyat) என்று அழைக்கப்படும் அம்னோவின் மகளிர் பிரிவினர். இவர்கள்தான் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்காளர்களை அடையாளம் கண்டு, தேசிய முன்னணிக்கு வாக்காளர்களின் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆராய்ந்து தகவல் தரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரச்சாரங்களில் முதன்மை வகிப்பது 1எம்டிபி விவகாரம் என்பதால், தேசிய முன்னணிக்காகப் பிரச்சாரம் செய்பவர்களிடையே 1எம்டிபி குறித்த அரசாங்கத் தரப்பு விளக்கங்களை வழங்கி வருகிறார் அருள் கந்தா.

அந்த விளக்கக் கூட்டத்தில் சுங்கை சிப்புட் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும் கலந்து கொண்டார்.

சுங்கை சிப்புட் இனி மைக்கல் ஜெயகுமாரின் கோட்டையல்ல!

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாள் வரை எதிர்க்கட்சிகளில் கோட்டையாக – குறிப்பாக நடப்பு நாடாளுமன்ற வேட்பாளர் மைக்கல் ஜெயகுமாரின் கோட்டையாகக் கருதப்பட்ட – சுங்கை சிப்புட்டின் நிலவரம் ஒரே நாளில் மாறிவிட்டது.

2 மே 2018-இல் சுங்கை சிப்புட்டில் நடைபெற்ற அம்னோவின் பிரச்சாரக் கூட்டத்தில் மஇகா சுங்கை சிப்புட் தொகுதி தலைவர் இளங்கோ, சுங்கை சிப்புட் தொகுதி அம்னோ தலைவரும், லிந்தாங் சட்டமன்ற வேட்பாளருமான முகமட் சுல்கிப்ளி ஆகியோருடன் தேவமணி

மாற்றத்திற்கான காரணம் இங்கு ஏற்பட்டிருக்கும் 4 முனைப் போட்டி! அதிலும் முக்கியமாக கடந்த 2 பொதுத் தேர்தல்களிலும் இங்கு வெற்றி பெற்ற பார்ட்டி சோஷலிஸ்ட் ராயாட் கட்சியின் (பிஎஸ்எம்) மைக்கல் ஜெயகுமார் இந்த முறை தனித்து நிற்பது!

பாஸ் கட்சியும் இங்கு தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக வாக்குகள் பெருமளவில் பிளவுபடும் என்பதால் அதனால் ஏற்படக் கூடிய சாதகம் யாருக்கு என்பதுதான் சுங்கை சிப்புட்டைச் சுற்றி வந்தபோது நாம் எங்கும் காணும்-கேட்கும்- விவாதமாக இருக்கிறது.

2008 முதல் 2 தவணைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மைக்கல் ஜெயகுமார் சுமார் இரண்டாயிரம் வாக்குகளையாவது தனித்துப் பெறுவார் என்பது இங்கு பரவலாகப் பேசப்படுகிறது. இருந்தாலும் அவரால் வெற்றி பெற முடியாது என்பதுதான் அனைவரின் கணிப்புமாக இருக்கிறது.

கடந்த 2 பொதுத் தேர்தல்களிலும் எல்லா எதிர்க்கட்சிகளும் அவரவர்களின் சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டபோது, பிஎஸ்எம் கட்சியின் மைக்கல் ஜெயகுமார், பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் இந்தமுறை ஜசெக போன்ற கட்சியே தங்களின் பிரபலமான ராக்கெட் சின்னத்தைத் தூக்கி மூலையில் வைத்து விட்டு, பிகேஆர் சின்னத்தில் போட்டியிட முன்வர, மைக்கல் ஜெயகுமாரோ, பிஎஸ்எம் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என இறுதி வரை தனித்துப் போராடுவது, எதிர்க்கட்சி ஆதரவாளர்களிடையே அவரது மதிப்பையும், ஆதரவையும் பெருமளவில் சரியச் செய்திருக்கிறது என்கின்றனர், சில உள்ளூர் வாக்காளர்கள்.

55,002 வாக்காளர்களைக் கொண்ட சுங்கை சிப்புட்டில், 35 விழுக்காடு மலாய் வாக்காளர்கள். இவர்களில் எத்தனை பேர் பாஸ் கட்சிக்கு வாக்களிப்பர் என்பதும் யாராலும் விடை கண்டுபிடிக்க முடியாத கேள்வி! வாக்குகள் எத்தனை பெற்றாலும், பாஸ் கட்சியாலும் இங்கு வெற்றி பெற முடியாது.

எனவே, இறுதியில் சுங்கை சிப்புட்டில் போட்டியிடுபவர்களில் எஞ்சி நிற்பது தேசிய முன்னணியின் தேவமணியும், பக்காத்தான் கூட்டணியின் எஸ்.கேசவனும்தான்.

தேவமணியின் சாதகங்கள்

இறுதி நேரத்தில் திடீரென ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினரான கேசவன் இங்கு பிகேஆர் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, சுங்கை சிப்புட் பிகேஆர் தொகுதியில் நிறைய எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது என்கின்றன ஒருசில பிகேஆர் வட்டாரங்கள். இந்த அம்சம் தேவமணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

மஇகாவின் தேசியத் துணைத் தலைவர், பிரதமர் துறையின்  துணையமைச்சர் என்பதெல்லாம் அவருக்கு இருக்கக் கூடிய மற்ற சாதகங்கள். சுங்கை சிப்புட்டில் இந்த முறை வென்றால், தேசிய முன்னணியும் மீண்டும் ஆட்சி அமைத்தால், தேவமணி நஜிப்பின் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்பதும் அவர் மீது எழுந்திருக்கும் மற்றொரு சாதக அம்சம்.

நேற்று புதன்கிழமை மாலையில் அருள் கந்தாவின் விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், சுங்கை சிப்புட் தாமான் துன் சம்பந்தன் பொதுமண்டபத்தில் நடைபெற்ற அம்னோ மகளிர் பிரிவினருடனான சந்திப்புக் கூட்டத்தில் தேவமணி மலாய் மொழியில் உரையாற்றியபோது அங்கு குழுமியிருந்தவர்களிடையே அவரது சரளமான மலாய்மொழி உரையாடலுக்கு பெரும் வரவேற்பிருந்ததை உணர முடிந்தது.

தேவமணியின் பிரச்சாரக் கூட்டத்தில் திரளாகக் கலந்து கொண்ட அம்னோ மகளிர் பிரிவினர்

மலாய் மொழியில் அந்தந்த வட்டார வழக்கிலேயே உரையாற்றும் வல்லமை பெற்றவர் தேவமணி என்பது அவருக்கிருக்கும் மற்றொரு பலம். இதன் மூலம் மலாய் வாக்குகளை அவர் அதிகமாகப் பெறுவார் என்றும் கணிக்கப்படுகிறது.

அம்னோவின் சார்பில் சுங்கை சிப்புட் அம்னோவின் தலைவர் டத்தோ ஹாஜி முகமட் சுல்காஃப்ளி (DATO’ HJ. MOHD ZOLKAFLY HJ. HARUN) சுங்கை சிப்புட் தொகுதியின் கீழ் வரும் லிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதால், அம்னோவின் ஆதரவு வாக்குகளை தேவமணி பெற முடியும் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.

ஆனால், சுங்கை சிப்புட்டில் இருக்கும் 36 விழுக்காடு சீன வாக்காளர்கள்தான் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் வல்லமை வாய்ந்தவர்கள். 21 விழுக்காடாக இருக்கும் இந்தியர்களின் வாக்குகளும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

சுங்கை சிப்புட்டில் கடுமையான போட்டி தேவமணிக்கும், கேசவனுக்கும் இடையில்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பக்காத்தான் கூட்டணியின் கணிப்புப்படி மலாய் வாக்காளர்களின் சுனாமி எழுந்து – அம்னோவுக்கு எதிரான அரசியல் அலை வீசினால் – சீன வாக்குகளும் சேர்ந்து கொள்ள – அது கேசவனுக்கு சாதகமாக அமையலாம்.

அத்தகைய தேசிய முன்னணிக்கு எதிரான அலை பேரலையாக எழாமல், எந்தவித ஆர்ப்பரிப்பும் இல்லாமல் கடந்து போனால் – ஜெயகுமாரின் பிஎஸ்எம் கட்சியும், பாஸ் கட்சியும் பிளவுபடுத்தப் போகும் வாக்குகளால் – தேவமணி சுங்கை சிப்புட் தொகுதியை மஇகாவின் சார்பில் கைப்பற்றும்  வரலாற்று மாற்றம் நிகழலாம்.

-இரா.முத்தரசன்