Home தேர்தல்-14 தேர்தல்-14 முடிவுகள்: வேத சோதிடம் சொல்வது என்ன? – கணிக்கிறார் ரமேஷ் செல்லையா!

தேர்தல்-14 முடிவுகள்: வேத சோதிடம் சொல்வது என்ன? – கணிக்கிறார் ரமேஷ் செல்லையா!

1432
0
SHARE
Ad
முகநூல் பக்கத்தில் ரமேஷ் செல்லையாவின் பொதுத் தேர்தல் கணிப்பு

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் என்றாலே ஒவ்வொரு தரப்பும் ஆரூடங்கள் வழங்குவது வழக்கம்தான். சில தரப்புகள் பந்தயங்கள் கூட கட்டுவார்கள்.

ஆனால், இந்தியர்கள் என்றால், உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும், எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அதற்கான சோதிட ரீதியான ஆரூடங்களை மேற்கொண்டு ஆராய்ச்சி செய்து தங்களின் கணிப்புகளை வெளியிடுவார்கள்.

அந்த வகையில் பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த ரமேஷ் செல்லையா என்பவர், தான் ஆர்வத்துடன் பின்பற்றும், இந்து முறைப்படியான வேத சோதிடம் ரீதியாக 14-வது பொதுத் தேர்தல் குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் தனது கணிப்புகளை ஆங்கிலத்தில் எழுதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அவரது கணிப்புகள் பல சமூக ஊடகங்களால் பரவலாக அனைத்துலக அளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.

அவரது அனுமதியுடன் அவரது கணிப்புகளின் தமிழாக்கத்தை இங்கே வழங்குகிறோம்.

எனினும், இந்தக் கணிப்புகள் முழுக்க முழுக்க ரமேஷ் செல்லையாவின் சொந்த கணிப்புகள் என்பதையும், இந்த கணிப்புகள் மீது செல்லியல் ஊடகத்திற்கு உடன்பாடோ, ஆதரவோ கிடையாது என்பதையும், இந்தக் கணிப்புகள் குறித்து எங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சோதிடத்தில் ஆர்வம் கொண்ட வாசகர்களுக்காக மட்டுமே ரமேஷ் செல்லையாவின் இந்த கணிப்புகளை, அரசியல் நோக்கம் எதுவுமின்றி. செல்லியலில் வெளியிடுகிறோம்.

14-வது பொதுத் தேர்தல் குறித்து ரமேஷ் செல்லையா கூறும் கணிப்புகள் (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்)

“பக்காத்தான் ஹரப்பான் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும்.

9 மே 2018-ஆம் நாள் சோதிட ரீதியாகப் பார்க்கப்படும் 9 கோள்களும் எதிர்க்கட்சியின் வெற்றியைக் குறிக்கும் வண்ணம் அணிவகுத்து நிற்கின்றன.

எனது கணிப்பு முழுக்க முழுக்க வேதங்களின் அடிப்படையிலான சோதிடத்தை ஆதாரமாகக் கொண்டு கணிக்கப்பட்டதாகும்.

எனது கணிப்புக்கு அடிப்படை ஆதாரமாக நான் எடுத்துக் கொண்டது மலேசியாவின் சுதந்திர தினமான 31 ஆகஸ்ட் 1957-ஆம் நாள் இருந்த கோள்களின் நிலையாகும்.

மேலும், வாக்களிப்பு நடைபெறும் 9 மே 2018-ஆம் நாள் வாக்களிப்பு முடிவடையும் மாலை 5.00 மணிக்கான பிரசன்னஅடிப்படையிலான கோள்களின் நிலையையும் நான் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளேன்.

ஆதரவு வாக்குகள்:

14-வது பொதுத் தேர்தலில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 38% முதல் 42% வரையிலான வாக்குகளை தேசிய முன்னணி தனக்கு ஆதரவாகப் பெறும்.

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி மற்றும் அவர்களின் கூட்டுக் கட்சியான வாரிசான்  சபா மாநிலத்தில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் குறைந்த பட்சம் 55% வாக்குகளைப் பெறும்.

முதன் முறையாக மலேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தொகுதிகளை எதிர்க்கட்சிகள் வெல்லும்.

புதன் கிரகத்தின் நெருக்கடியான நகர்வு:

நாம் அக்கறையுடன் கவனிக்க வேண்டியது புதன் கிரகத்தின் நகர்வாகும். தேர்தல்கள் என்று வரும்போது மற்ற எல்லா கோள்களை விடவும் நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டியது புதன் கிரகத்தின் நகர்வுதான்.

இன்று புதன்கிழமை (9 மே) இரவு 9.55 மணி – கோலாலம்பூர் நேரப்படி – மீன ராசியின் கடைசி பாகையில் இருந்து மேஷ ராசியின் முதல் பாகைக்கு புதன் கிரகம் நகர்கிறது.

இதன் காரணமாக, அந்த நேரத்திலிருந்து அடுத்த 24 மணி முதல் 48 மணி வரையிலான காலகட்டத்தில் நிச்சயமற்ற ஒரு சூழல் நிலவும்.

இன்று புதன்கிழமை (9 மே) புதன் கிரகம் மேஷ ராசிக்கு செல்லும் அதே 8.55 (இரவு) காலகட்டத்தில் செவ்வாய் நான்காம் இடத்திலிருந்து புதன் கிரகத்தைப் பார்வையிடுகிறது.

எனவே, இந்த காலகட்டத்தில் கோள்களின் அமைப்புப்படி அரசாங்க மாற்றம் நிகழும் என்பது சோதிடம் காட்டும் கணிப்பாகும்.

இதனை நான் வேத சோதிடங்களின் அடிப்படையில் அரசியல் நோக்கமின்றி கணித்துள்ளேன். சோதிடம் என்பது எனது முதன்மையான ஆர்வமாகும். இந்த சோதிடக் கலையின் மீது எனக்கு 19-வது வயதில் ஈடுபாடு ஏற்பட்டு, 1987-ஆம் ஆண்டு முதல் ஆர்வத்துடன் இந்தக் கலையை நான் கற்று வருகிறேன்”