புத்ரா ஜெயா – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையராக பதவி ஓய்வு பெற்ற டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் அந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுவதாக துன் மகாதீர் அறிவித்துள்ளார்.
இன்று காலையில் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற பக்காத்தான் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மகாதீர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட்டுக்குப் பதிலாக சுக்ரி அப்துல் நியமிக்கப்படுகிறார். சுல்கிப்ளி அகமட் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் கடிதத்தை அனுப்பி விட்டார்.
இதற்கிடையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அபு காசிம் இன்று வியாழக்கிழமை காலை மகாதீரைச் சந்தித்தார். தனது சந்திப்பு குறித்து பிரதமரே தெரிவிப்பதுதான் முறை எனக் கருத்து தெரிவித்த அபு காசிம் தனது கருத்துகளை மகாதீரிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
முந்தைய அரசாங்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து அபு காசிம் நிறைய விவரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்றும், அவரது அனுபவம் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட சுல்கிப்ளி அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். சுல்கிப்ளியின் பதவிக் காலம் எதிர்வரும் 2021-ஆம் ஜூலை வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
எனினும், தனது பதவிக்கான ஒப்பந்தக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும்படி அரசாங்கத் தலைமைச் செயலாளருக்கு சுல்கிப்ளி கடிதம் எழுதியுள்ளார்.