கோலாலம்பூர் – 1எம்டிபி நிறுவன முறைகேடுகள் தொடர்பாக காவல் துறையினரால் நடத்தப்பட்டு வரும் அதிரடி சோதனைகளில் இதுவரை 78 பெட்டிகளில் பல்வேறு நாடுகளின் நாணயங்களில் ரொக்கப் பணம், 284 ஆடம்பர கைப்பைகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
புக்கிட் பிந்தாங் பெவிலியன் அடுக்கு மாடி குடியிருப்பில் நஜிப் தொடர்புடைய இரண்டு இல்லங்களில் இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நஜிப் தொடர்புடைய 6 இடங்களில் இதுவரை சோதனைகள் நடத்தப்பட்டன.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு இவை யாவும் அங்காடிக் கடைகளில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டிகளில் பெட்டி பெட்டியாகக் கொண்டு வரப்பட்டு, காவல் துறையின் 5 டிரக் ரக பெரிய வாகனங்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து கருத்துரைத்த காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங், 1எம்டிபி விசாரணைகள் தொடர்பில் இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்டஇவற்றின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.