Home நாடு “அல்தான்துயா வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்” – அன்வார் இப்ராகிம்

“அல்தான்துயா வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்” – அன்வார் இப்ராகிம்

1285
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய நீதித் துறையில் அனைவராலும் மறக்க முடியாத வழக்கு மங்கோலிய அழகி அல்தான்துயாவின் கொலை வழக்கு. இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த சைருல் அசார் உமார் மற்றும் அசிலா ஹட்ரி ஆகிய இருவரும் அல்தான்துயாவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

சைருல் அசார் உமார்

விசாரணையின் முடிவில் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், சைருல் தீர்ப்புக்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்று அங்கேயே தங்கி விட, தற்போது 2015 முதல் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து வழங்கிய நேர்காணல் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் முக்கிய நபர்கள் அல்தான்துயா ஷாரிபுவை 2006-ஆம் ஆண்டில் கொல்வதற்கு உத்தரவிட்டனர் என சைருல் தெரிவித்திருந்தார். எனினும், அவ்வாறு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை அவர் இன்னும் தெரிவிக்கவில்லை.

2002-இல் பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட அப்துல் ரசாக் பகிண்டாவின் காதலி அல்தான்துயா எனக் கூறப்படுகிறது. அந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் விவகாரத்தில் 534 மில்லியன் ரிங்கிட் இடைத் தரகுப் பணமாக கைமாறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு நெருக்கமானவராக விளங்கியவர் அப்துல் ரசாக் பகிண்டா.

ஆஸ்திரேலியா பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அன்வார் இப்ராகிம், சைருல் மீண்டும் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அந்த வழக்கு விசாரணையின்போது பல முக்கிய சாட்சிகள் விசாரிக்க அழைக்கப்படவில்லை என்றும், அந்த வழக்கு நியாயப்படி நடத்தப்படவில்லை என்றும் அன்வார் குற்றம் சாட்டினார்.

அல்தான்துன்யா மர்மமான முறையில் ஏன் 2009-இல் கொல்லப்பட்டார் என்பது குறித்து பல்வேறு விதமான ஆரூடங்கள் பல்லாண்டு காலமாக உலவி வருகின்றன.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங்கும் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். அல்தான்துயாவைக் கொல்ல உத்தரவிட்டது யார் என்பதை விசாரிக்க அரச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.