Home தேர்தல்-14 தேர்தல் நாள் இரவில் “நொறுங்கிப் போன” நஜிப் 2 முறை என்னை அழைத்தார் – அன்வார்

தேர்தல் நாள் இரவில் “நொறுங்கிப் போன” நஜிப் 2 முறை என்னை அழைத்தார் – அன்வார்

1954
0
SHARE
Ad
செராஸ் மருத்துவமனையில் இருந்து விடுதலையாகி வெளியேறும் அன்வார் (16 மே 2018)

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய மே 9-ஆம் தேதி இரவு, தோல்வியால் ‘நொறுங்கிப் போன’ நஜிப் துன் ரசாக் தன்னை இரண்டு முறை தொலைபேசியில் அழைத்து ‘அடுத்து நான் என்ன செய்வது’ எனக் கேட்டார் என அன்வார் இப்ராகிம் கூறினார்.

அப்போது நஜிப்பிடம் பேசியபோது, “ஒரு நண்பன் என்ற முறையில் நீங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள்” என்று கூறியதாக நேற்று வியாழக்கிழமை ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தனது இல்லத்திலிருந்து வழங்கிய பேட்டியில் அன்வார் தெரிவித்தார்.

உடனடியாக ஓர் அறிக்கையை வெளியிடும்படி நஜிப்பை கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்ட அன்வார், எனினும் மகாதீரின் வெற்றி குறித்து நஜிப் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

மாறாக, தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நஜிப், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும், நாட்டின் மாமன்னர் யாரை அரசாங்கம் அமைக்க அழைப்பது என்பது குறித்து முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

“இதன் மூலம் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் நழுவுகின்ற மாதிரி நடந்து கொண்டார்” என்றும் அன்வார் கூறினார்.

“நஜிப் என்ன செய்வது என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். அதுகுறித்து என்னுடன் கலந்தாலோசிக்கவே விரும்பினார். ஆனால் தீவிரமான முறையில் என்னுடன் அரசியல் உடன்பாடு காணும் வகையில் பேச்சு நடத்தவில்லை” என்றும் அன்வார் தனது பேட்டியில் தெளிவுபடுத்தினார்.

“அப்படியே தேர்தலுக்குப் பிந்திய உடன்பாடு ஒன்றை நஜிப் முன் மொழிந்திருந்தாலும் நான் கண்டிப்பாக மறுத்திருப்பேன். அன்றிரவு அவர் சொல்லிக் கொண்டிருந்ததை நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன். இரண்டாவது முறை நஜிப் அன்றிரவு என்னை அழைத்தபோது அவர் நொறுங்கிப் போன மனநிலையில் இருந்தார் என்பதை என்னால் உணர முடிந்தது” என்றும் அன்வார் கூறியிருக்கிறார்.