ஜோர்ஜ் டவுன் – கடந்த 2008 முதல் பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது நிலை துணை முதல்வராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் டத்தோ பி.இராமசாமி தொடர்ந்து மூன்றாவது தவணைக்கும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை மே 16-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட அவர், பிறை சட்டமன்றத்தில் போட்டியிட்டு 9,049 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இராமசாமிக்கு 11,243 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் எம்.சுரேஷ் 2,194 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
பினாங்கு ஆட்சிக் குழுவில் இராமசாமிக்கு மாநிலப் பொருளாதாரத் திட்டப் பிரிவு, கல்வி மற்றும் மனித வளம், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் – ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பினாங்கு ஆட்சிக் குழுவில் ஜக்டிப் சிங் டியோவும் இரண்டாவது தவணைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே மாநிலமாகவும், இந்தியத் துணை முதல்வர் ஒருவரைக் கொண்ட மாநிலமாகவும் பினாங்கு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
பினாங்கு முதல்வராகப் பதவி வகித்த லிம் குவான் எங் நிதியமச்சராகிவிட்ட நிலையில், புதிய பினாங்கு முதல்வராக சௌ கோன் இயோ பதவியேற்றிருக்கிறார்.
பினாங் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் அகமட் சக்கியுடின் அப்துல் ரஹ்மான் முதல் நிலை துணை முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த தவணையில் முதல் நிலை துணை முதல்வராக இருந்த டத்தோ முகமட் ரஷிட் ஹஸ்னோன், தனது பூர்வீக மாநிலமான ஜோகூருக்குத் திரும்பி, பத்து பகாட் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வென்றார்.
பினாங்கு மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழுவில் பிரிபூமி பெர்சாத்து, அமானா ஆகிய கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.