Home தேர்தல்-14 மகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்

மகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்

3943
0
SHARE
Ad
துன் மகாதீர்

புத்ரா ஜெயா – மலேசியாவில் பின்தங்கி இருக்கும் விளிம்பு நிலை சமூகங்களை – குறிப்பாக இந்திய சமுதாயத்தை – மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படும் நடவடிக்கைக் குழுவுக்கு பிரதமர் துன் மகாதீரே தலைமைப் பொறுப்பேற்று உள்ளார்.

இந்த நடவடிக்கைக் குழுவில் தனக்குத் துணையாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் செயல்படுவார் என்றும் அறிவித்த மகாதீர், இந்த வாக்குறுதியைத் தாங்கள் தேர்தல் அறிக்கையில் வழங்கியிருப்பதால் உடனடியாக இந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் ‘பிரி மலேசியா டுடே’ இணைய ஊடகத்திடம் பேசிய போது, “பின்தங்கிய இனங்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மகாதீர் மிகவும் அக்கறை கொண்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பக்காத்தான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டபோது குறிப்பாக இந்தியர்களின் விவகாரத்தில் மிகவும் கவனம் செலுத்தியதோடு அவர்களின் நலன் குறித்தும் தனது அக்கறையை வெளிப்படுத்தினார்” எனக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் உதவித் தலைவரான குலசேகரன், அக்கூட்டணியின் தலைமைத்துவ மன்றத்தில் இந்தியர் பிரதிநிதியாகவும் இடம் பெற்றுள்ளார்.

“இந்தியர்கள் 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு வழங்கிய அமோக ஆதரவுக்கும் மகாதீர் நன்றி தெரிவித்துக் கொண்டார்” என்றும் குலசேகரன் தெரிவித்திருக்கிறார்.

இந்தியர் சார்பிலான அமைச்சர் ஒருவர் இன்னும் நியமிக்கப்படவில்லையாதலால் மகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்கு பொறுப்பேற்றுள்ளார்.

பக்காத்தான் கூட்டணி, பொதுத் தேர்தலின்போது, 25 அம்சங்களை உள்ளடக்கிய இந்தியர்களுக்கான பிரத்தியேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

அடுத்த 10 ஆண்டுகளில் 4 பில்லியன் ரிங்கிட்டை இந்தியர்களுக்காக ஒதுக்குவது – இடைநிலைத் தமிழ்ப் பள்ளி நிர்மாணிப்பது – சிவப்பு அடையாள அட்டை மற்றும் நாடற்ற இந்தியர்கள் பிரச்சனை – ஆகியவை பக்காத்தான் கூட்டணியின் வாக்குறுதிகளில் முக்கியமானவை ஆகும்.