புத்ரா ஜெயா – மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ரோபர்ட் குவோக் பொதுவாக எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். ஆனால் 14-வது பொதுத் தேர்தலில் பல்வேறு காரணங்களுக்காக சர்ச்சைகளின் நாயகனாகத் திகழ்ந்தார்.
இன்னும் சொல்லப் போனால், நஸ்ரி அசிஸ் போன்ற தேசிய முன்னணி அமைச்சர்கள் – தலைவர்கள் – 90 வயதைத் தாண்டிய ரோபர்ட் குவோக் மீது மேற்கொண்ட கடுமையானத் தாக்குதல்கள்தான் சீன சமுதாயத்தின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு எதிராகத் திசை திருப்பின என்கின்றன சில அரசியல் ஆய்வுகள்.
பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றியின் பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, துன் மகாதீர் அமைத்த 5 பேர் கொண்ட மூத்த மேதகையாளர்கள் ஆலோசனைக் குழுவில் (Council of Eminent Persons) ஒருவராக நியமிக்கப்பட்டார் ரோபர்ட் குவோக்.
வழக்கமாக ஹாங்காங்கில் வசிக்கும் மலேசியரான ரோபர்ட் குவோக், நேற்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பி, துன் டாயிம் தலைமையிலான மூத்த மேதகையாளர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரோபர்ட் குவோக், “மூத்த தலைவர்களின் ஆலோசனை மன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் மிகச் சிறந்த, அறிவார்ந்த தலைவர்கள். சிறப்பாகச் செயல்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை (மே 23) துன் மகாதீரையும் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் ரோபர்ட் குவோக்.
படங்கள்: நன்றி: மகாதீரின் அதிகாரத்துவ வலைத்தளம் ‘செ டெட்’