புத்ரா ஜெயா – நேற்று வியாழக்கிழமை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது வாக்குமூலத்தை வழங்க புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்திருந்த போது, ஏறத்தாழ அதே நேரத்தில் மற்றொரு மனிதரும் 1எம்டிபி குறித்த விவரங்களை வழங்க அதே ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்திருந்தார்.
அவர்தான் சேவியர் அண்ட்ரி ஜஸ்டோ! பெட்ரோ சவுதி என்ற நிறுவனத்தின் அனைத்துலக அதிகாரிகளில் ஒருவர்.
இன்று 1எம்டிபி ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து – நஜிப்பின் தலைமையிலான 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியைக் கவிழ்த்து – இன்று அவரை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அலைய விட்டதற்கும் மூலகாரணம் ஜஸ்டோ அன்று வெளியிட்ட சில தகவல்கள்தான்.
தற்போது மலேசியா திரும்பி பிரதமர் துன் மகாதீரை இரண்டு முறை சந்தித்து விட்டார். ஜஸ்டோ. இரண்டாவது முறையாக அவர் மகாதீரைச் சந்தித்தது அவரது வீட்டில் என்பதிலிருந்து மகாதீர் அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கிறார் என்பது புலப்படும்.
அந்தச் சந்திப்புகளைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை (மே 24) ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்து தனது வாக்குமூலத்தைத் தந்திருக்கிறார் ஜஸ்டோ.
தனது உயர் அதிகாரிகளிடம் இருந்து, அலுவலகத்தின் அதிகாரபூர்வத் தகவல்களைத் திருடினார், அதைவைத்துக் கொண்டு மிரட்டிப் பணம் பறிக்கப் பார்த்தார் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் தண்டனையோடு தாய்லாந்து சிறையில் ஆகஸ்ட் 2015-இல் அடைக்கப்பட்டார் ஜஸ்டோ.
பின்னர் அரச மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலையானார். குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
ஆனால், தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள், தனது குடும்பத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல்கள், தாய்லாந்து சிறையில் அனுபவித்த கொடுமைகள் ஆகியவற்றின் காரணமாகத்தான் குற்றத்தை ஒப்புக் கொண்டேன், மாறாக அந்தத் தகவல்கள் என்னிடம் கொடுக்கப்பட்டன – நான் யாரிடமிருந்தும் திருடவில்லை என்றும் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் ஜஸ்டோ.
அந்தத் தகவல்களை அவர் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தின் நிறுவனர் கிளேர் ரியூகாசல் பிரவுனிடம் வழங்க – அதை அவர் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தில் வெளியிட – 1எம்டிபி ஊழல் விவகாரம் வெடிக்கத் தொடங்கியது.