Home நாடு நேசா கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக டான்ஸ்ரீ சுப்ரா விலகல்

நேசா கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக டான்ஸ்ரீ சுப்ரா விலகல்

1702
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – 1979-ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவுக்குப் பின்னர் நேசா பலநோக்குக் கூட்டுறவுக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டு வந்த டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை (2 ஜூன் 2018) பெட்டாலிங் ஜெயா தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற நேசா ஆண்டுப் பேராளர் மாநாட்டின் இறுதியில் நேசா வாரியத் தலைவர் ஆர்.இராஜண்ணன் டான்ஸ்ரீ சுப்ராவின் குடும்பத்தின் சார்பாக அவரது துணைவியார் புவான்ஸ்ரீ தீனா சுப்பிரமணியம் அனுப்பியிருந்த கடிதத்தை வாசித்தார்.

கடந்த 7 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ சுப்ரா நேசாவின் தலைவர் பொறுப்புகளையும், கடமைகளையும் ஆற்றக் கூடிய நிலைமையில் இல்லை என்றும் அதன் காரணமாக அவரை நேசாவின் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் தீனா சுப்பிரமணியம் நேசா இயக்குநர் வாரியத்தைக் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து டான்ஸ்ரீ சுப்ராவின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் நோக்கில், அவரை நேசாவின் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிப்பது எனவும் அதே நேரத்தில் இத்தனை ஆண்டுகளாக அவர் ஆற்றி வந்த சேவைகளைக் கருத்தில் கொண்டு நேசா தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை அகற்றுவது என்றும் இன்றைய பேராளர் மாநாடு முடிவெடுத்தது.

அந்த முடிவுகளை சட்டபூர்வமாக நிறைவேற்றும் முடிவையும் நேசா இயக்குநர் வாரியம் மேற்கொள்ள வேண்டுமெனவும் நேசா பேராளர் மாநாடு முடிவெடுத்தது.

இதனைத் தொடர்ந்து இனி நேசாவின் தலைவராக டான்ஸ்ரீ சுப்ரா செயல்பட மாட்டார்.

நேசாவுக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளும் இனி கிடையாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

நேசாவின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் அதன் இயக்குநர் வாரியமே இனி நேரடியாக எப்போதும் போல் நிர்வகித்து வரும்.