(மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை ஆதரவுடன், கடந்த ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை நடத்திய முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு – 2018 குறித்த தனது பரவலான பார்வையை புதுவைப் பல்கலைப் பேராசிரியை முனைவர் இளமதி சானகிராமன் அவர்கள் வழங்குகிறார்)
முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு – 2018 பல்லாற்றானும் பயனுடையதாக நடந்தேறியது.இம் மாநாட்டிற்குமுனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் தலைமை ஏற்றார். 8.6.2018ஆம் நாள் பிற்பகலில் தொடங்கிய மாநாடு 10.6.2018 பிற்பகலில் நிறைவு பெற்றது.
மாநாட்டைப் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ. சிவகுமார் தொடக்கி வைத்தார். அவர்தம் உரையில் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை, தங்குதடை இல்லாமல் தமிழைக் கற்கும் வாய்ப்பு ஏற்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் ‘பாக்காத்தான் ஹரப்பான்’ எனப்படும் நம்பிக்கைக் கூட்டணி அரசு இறங்கும் என்று கூறிய அவர், தமிழ்ப் பள்ளியோடு தமிழை மறந்துவிடும் நிலை தொடர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
இடைநிலைப் பள்ளியில் PT3 தேர்வில் தமிழ் மொழி எடுப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 5ஆம் படிவத்தில் மேலும் குறைந்து இலக்கியம் எடுப்போர் தொகை மிகவும்அருகி விடுகிறது. இது மிகவும் கவலை தரும் நிலை என்று கூறினார். இதனைப் நம்பிக்கைக் கூட்டணி அரசு கருத்தில் கொண்டுள்ளது. தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் இடையூறின்றித் தொடர வேண்டுமென்று அவர் கூறினார்.
முரசு நெடுமாறன் உரை
மாநாட்டுத் தலைவர் முனைவர் முரசு நெடுமாறன் தம் உரையைச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் நோக்கம், செயல் திட்டம் போன்றவற்றை ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்தார். அவ்வுரை அவையினரை ஈர்த்துச் சிந்திக்கத் தூண்டியது. அச்சிந்தனை அடுத்தடுத்த மாநாடுகளிலும்எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையையும் ஊட்டியது.
முதல் நாள் நிகழ்வில் மூன்று பொது அமர்வுகள் நடந்தன. ‘மலேசியாவில் சிறுவர் இலக்கியம் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் இணைப் பேராசிரியர் முனைவர் சு. குமரன் ஆய்வுக் கட்டுரை படைத்தார். அதற்குக் கல்வியாளர் ஏ. மு. சகாதேவன் தலைமை தாங்கினார்.
இந்த அங்கத்தைத் தொடர்ந்து மாநாட்டில் முதன்மை உரை இடம் பெற்றது. “வளர்ச்சியை நோக்கிக் குழந்தை இலக்கியம்” என்ற தலைப்பில்‘மூத்த தமிழ் ஆராய்ச்சி வல்லுநர்’ முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் விரிவான பேருரை நிகழ்த்தினார். அவர்தம் உரையில் உலகளாவிய தமிழ்க் குழந்தை இலக்கிய நிலையைப் படம் பிடித்துக் காட்டினார். மற்ற நாட்டு இலக்கியங்களோடு ஒப்பிட்டும் பேசினார். அவர் உரை மாநாட்டிற்குப் பெரும் பொலிவையும் பயனையும் சேர்த்தது.
மற்றொரு பொது அமர்வில் கனடாவைச் சேர்ந்த திரு. சு. இராசரத்தினம் உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரை அந் நாட்டுத் தமிழ்ச் சிறுவர் இலக்கிய வளர்ச்சியைத் தெளிவாக எடுத்துக் காட்டிற்று. அங்குக் கருத்தோடு வளர்க்கப் பெறும் சிறுவர் இலக்கிய வளர்ச்சி அவையோரை வியப்பில் ஆழ்த்தியது. அப்பொது அமர்விற்குப் புத்ரா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் மு. பரமசிவம் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து நடந்த பொது அமர்வில் தமிழ் நாட்டுச் சிறுவர்கள் ஜெயஸ்ரீ, ஜீவன், பிரியன் கீரன் ஆகியோர் பங்கு பெற்ற ‘திருக்குறள் கவனகம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்குறளை முழுமையாகப் பாடம் செய்து அவையோர் கேட்ட கேள்விகளுக்குச் சிறுவர்கள் பதிலளித்து வியக்க வைத்தனர். இந்த நிகழ்வுக்கு திரு. இரா மதிவாணன் தலைமை தாங்கினார்.
2-வது நாள் சனிக்கிழமை நிகழ்ச்சிகள்
இரண்டாவது நாளாகிய சனிக்கிழமை (9.6.2018) அன்று காலை 9.00 மணியளவில் ஆய்வரங்கம் தொடங்கியது. அழ. வள்ளியப்பா அரங்கம், வேலுசுவாமி அரங்கம் , முரசு நெடுமாறன் அரங்கம், இர. ந. வீரப்பன் அரங்கம் என நான்கு அரங்குகள் அமைக்கப்பெற்று ஒவ்வோர் அரங்கிலும் மும்மூன்று அமர்வுகள் நடைபெற்றன. அமர்வுகளுக்குப் பொறுப்பாளர்களும் நியமிக்கப் பெற்றனர். முனைவர் பட்டம் பெற்றவர்களும் வெளிநாடுகளில் இருந்து வந்த பேராளர்களுமான முனைவர். க. இளமதி சானகிராமன், திருவாளர் ஆல்பட், முனைவர் வீ. வீரமோகன், முனைவர் நா. கண்ணன்,முனைவர் தனலெட்சுமி போன்றோர் ஆய்வரங்கத் தலைமை ஏற்று ஆய்வுக் கட்டுரைகள் வழங்கி அமர்வையும் நன்கு திறம்பட நடத்திச் சென்றனர்.
ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் இம்மாநாட்டின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு இனி ஆற்ற வேண்டிய பங்களிப்பினையும் செவ்வனே எடுத்துரைத்தன. இவை இம்மாநாட்டின் வெற்றிக்குப் படிக்கற்களாக அமைந்தன.
சிறுவர் இலக்கியக் கலைவிழா
இவற்றைத் தொடர்ந்து 7.45 மணியளவில் இசுலாமிய ஆய்வுக் கல்வியகக் கலையரங்கில் சிறுவர் இலக்கியக் கலைவிழா மாநாட்டுச் செயலர் மன்னர் மன்னன் மருதை அவர்கள் வரவேற்புரையுடனும் மாநாட்டுத் தலைவர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் மிகச் சுருக்கமான தலைமையுரையுடனும் இனிதே தொடங்கியது.
சிறுவர்களான இசைக் கலைஞர்கள் குழந்தைகள் பாடிய தமிழ் வாழ்த்து பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன் எழுதி இசைக்கலைஞர் திரு. டி. எல். மகாராஜன் பாடிய மாநாட்டு எழுச்சிப் பாடலுடன் தொடங்கியது. குழந்தைகளே அறிவிப்பாளர்களாக இருந்து அறிமுகப்படுத்தி, குழந்தைகளே நடித்த, நடனமாடிய, பேசிய, பாடிய, குழந்தைக் கலை, மக்கள் நிரம்பிய அரங்கின் கைத்தட்டல் அதிர்வலைகளால் நிரம்பி வழிந்தது.
“இக் கலை விழா, வெறும் கலை விழா அன்று; கல்விக் கலை விழாவாகும். இவ் விழாவில் குழந்தைகள் நடித்த ‘நான்கு கோடி’ எனும் உயரிய கவிதை இலக்கிய நாடகம், அனைவரின் கண்களையும் கருத்தையும் கவர்ந்தது. அதில் நடித்த அவ்வையும் அரசனும் நாடக வல்லுனர்களையும் மிஞ்சினர்.
‘புள்ளிமானின் சுற்றுலா’ காட்டிலே நடக்க, அது சந்தித்த யானை, சிங்கம், புலி, கரடி முயல்கள் முதலான அனைத்தும் பார்வையாளர்களின் பார்வையை அகலவிடாமல் செய்தன. நீதிநெறி கூறும் வகையில் அமைந்த இச்சுற்றுலாவைப் பாராட்டாதவர் இல்லை.
குழந்தைகளின் கவியரங்கமோ “இப்படியும் குழந்தைகள் கவியரங்கு ஏறுவரா” பெரியோர்களையும் மிஞ்சிய இக்கவியரங்கம் குழந்தைகளே எழுதிப்பாடியது எனும் பொழுது குழந்தைகளின் அளப்பரிய ஆற்றலைக் கண்டோர், கேட்டோர் வியந்தனர். குழந்தைக் கவியரசு அழ. வள்ளியப்பா அவர்களின் ‘ஆடும் மயில்’ நடனத்தின் போது அருவியென பெய்த மழையைக் கண்ட கண்கள் இமைக்க மறந்தன. இவ்விழா நிகழ்ச்சிகளை அறிமுகப் படுத்தும் முகமாக வந்த முயல், பறவை, புலி, வரிக்குதிரை நான்கும் மேடையில் தோன்றுகின்ற ஒவ்வொரு முறையும் கைத்தட்டல் பெற்றன. இந்நிகழ்ச்சியின் தமிழின் சிறப்பை எடுத்துரைத்த மாணவர் சஸ்வின் ராஜ் உலகளாவிய பரிசு பெற்றவர். தொடர்ந்து ‘சின்னஞ்சிறு கிளியே’ எனும் பாடலுக்கு ஆடிய இரட்டையர் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தனர்.
உலகளாவிய குழந்தைக் கவிஞர்களின் பல பாடல்கள் இசையுடனும், நாடகமாகவும் நடிப்புப் பாடலாகவும் குழந்தைகளால் அரங்கேற்றப் பெற்றன. பண்பாட்டின் சிறப்பினை எடுத்துக் காட்டும் முனைவர் முரசு நெடுமாறனின் பொங்கல் விழாப் பாடல் குழந்தைகளின் ஆடலால் புதுப் பொலிவு பெற்றது. இக்கலைவிழாவின் உயரிய சிறப்பு அரங்கமாகும்.
இம்மாநாட்டின் எழுச்சிப் பாடலில் அமைந்த மலேசிய மண்ணின் இளஞ்சிறார்களின் நாட்டியம், மழலையரின் செயற்பாடு என மிளிர்ந்தது. அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப வழங்கப் பெற்ற அரண்மனை வளாகம்; சந்திப்பு இடங்கள், காடு போன்றவை கற்பனையின் உச்சத்தை காட்டின. இனிய ஒலி,மேடையில் பெய்த மழை என அனைத்தும் அற்புதக் காட்சிகளாய் எண்ணத்தையும் இதயத்தையும் ஈர்த்தன. இவ்விழாவிற்கான பொறுப்பினை ஏற்ற இசை முரசு இளவரசுவையும் அவரது குழுவினரையும் எப்படிப் பாராட்டினாலும் தகும்.
கலைவிழாவில் சிம்பாங்லீமா,வாட்டசன், பத்துமலைத் தமிழ்ப் பள்ளிகளும் தஞ்சை கமலா இந்திரா நடனப்பள்ளி, ஸ்ரீ ரெங்க நாதர் பரதாலயம், அருண் நுண்கலைப் பள்ளி, நுண்கலைக் கோயில் ஆகிய கலை அமைப்புகள் கலை விழாவிற்கு உயிரூட்டிப் பொலிவைச் சேர்த்தன.
விழாவின் இறுதியில்கலைவிழா இனிதே நிகழ முழுமனத்துடன் துணைபுரிந்த செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் அவர்கள் நிறைவுரையாற்றி விழாவில் பங்கு பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
அவரது கொடை உள்ளம் அனைவரையும் நெகிழச் செய்தது. இக்கலைவிழா, குழந்தைகளுக்கான கலைவிழாவை எவ்வாறு இனி வருபவர்கள் நடத்த வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது; கலை விழாவில் பங்குகொண்ட சான்றோர் அனைவர் எண்ணமும் இதுவாகவே இருந்தது.
தமிழ்கூறு நல்லுகச் சிறுவர் இலக்கிய மேம்பாட்டிற்கு இம்மாநாட்டால் உந்துதல் ஏற்பட்டுள்ளது என்பதனை மறுக்க இயலாது. தமிழ்க் குழந்தை கலை, இலக்கிய வரலாற்றில் இஃது ஒரு மைல்கல் எனலாம்.