Home நாடு 1987-இல் விட்டதை 2018-இல் துங்கு ரசாலி பிடிப்பாரா?

1987-இல் விட்டதை 2018-இல் துங்கு ரசாலி பிடிப்பாரா?

1049
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோவின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன் என துங்கு ரசாலி ஹம்சா (படம்) அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் மீதான மக்கள் ஆர்வம் மீண்டும் சற்றே துளிர்த்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தத் தருணத்தில் நமது நினைவுகள் 1987-ஆம் ஆண்டை பின்னோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது. அப்போது மகாதீர் பிரதமர் – அம்னோ தலைவர்.

மகாதீருக்கும், அப்போதைய துணைத் தலைவர் (துன்) மூசா ஹீத்தாம் இருவருக்கும் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக தனது துணைத் தலைவர் பதவியைத் துறந்தார் மூசா ஹீத்தாம்.

அந்த நாள் – மூசா ஹீத்தாம், துங்கு ரசாலி, மகாதீர்…
#TamilSchoolmychoice

1987 அம்னோ தேர்தலில் துங்கு ரசாலி தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட, அவருக்குத் துணையாக மூசா ஹீத்தாம் மீண்டும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். துங்கு ரசாலி வெறும் 43 வாக்குகளில் மகாதீரிடம் தோல்வியடைந்தார். மூசா ஹீத்தாம் ஒரே வாக்கு வித்தியாசத்தில் மகாதீர் அணியில் போட்டியிட்ட துன் கபார் பாபாவிடம் தோல்வியடைந்தார்.

1987-இல் நடந்த மற்றொரு சுவாரசியம் என்னவென்றால் அப்போது அம்னோ இளைஞர் பகுதித் துணைத் தலைவராக இருந்த நஜிப் துன் ரசாக், துங்கு ரசாலி ஹம்சாவுக்குத்தான் ஆதரவு தெரிவிப்பார் என்ற நிலைமையில், தேர்தல் நெருங்கும் இறுதிக் கட்டத்தில் மகாதீருக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போதும் நஜிப் பெக்கான் தொகுதித் தலைவராக இருந்தார்.

நஜிப் மகாதீரை ஆதரித்ததற்கு காரணமும் இருந்தது.

அம்னோ இளைஞர் பகுதித் தலைவராக அன்வார் – துணைத் தலைவராக நஜிப்

அம்னோ இளைஞர் பகுதித் தலைவராகவும், மகாதீரின் தீவிர ஆதரவாளராகவும் அப்போது இருந்த அன்வார் இப்ராகிம், அந்தப் பதவியை இளைஞர் பகுதித் துணைத் தலைவராக இருந்த நஜிப்புக்கு ஆதரவாக விட்டுக் கொடுத்தார். பிரதிபலனாகத்தான் நஜிப்பின் ஆதரவு மகாதீருக்குக் கோரப்பட்டது.

அதே ஆண்டில்தான் அன்வார் முதன் முறையாக உதவித் தலைவர் பதவிக்கு அம்னோவில் போட்டியிட்டார்.

காலச் சுழற்சியில் 31 வருடங்களுக்குப் பிறகும் இதே அரசியல் முகங்கள் – கதாபாத்திரங்கள் – இன்றும் மலேசிய அரசியலில் இருவேறு துருவங்களில் – வேறு வேறு முனைகளில் – தீவிரப் பங்காற்றி வரும் சுவாரசியமான – ஆச்சரியமான – காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

1987-இல் அம்னோ தலைவராக வெற்றி பெற்ற மகாதீர் – துணைத் தலைவராக கபார் பாபா

அதன் பின்னர் அம்னோ தேர்தல் குறித்த வழக்கு நடைபெற்றதும், அம்னோவின் பதிவு நீதிமன்றத்தால் சட்டரீதியாக இரத்து செய்யப்பட்டதும், துங்கு ரசாலி செமாங்காட் 46 என்ற தனிக்கட்சி அமைத்து 1990 மற்றும் 1995 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டதும், பின்னர் அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு அம்னோவுக்குத் திரும்பியதும், மலேசிய அரசியல் வரலாற்றின் நீண்டு கொண்டே போகும் பக்கங்கள்!

இத்தனை ஆண்டுகாலப் போராட்டத்தில் துங்கு ரசாலி இரண்டு விஷயங்களில் தனித்து நிற்கிறார்.

முதலாவது, 1974-இல் முதன் முதலாக நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட குவா மூசாங் தொகுதியை (அப்போது உலு கிளந்தான் என்று அழைக்கப்பட்டது) அதற்குப் பின்னர் எந்தக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டாலும், இன்று வரை வென்று வந்திருக்கிறார்.

அடுத்தது, எப்போது அம்னோ தலைவர் பதவிக்கான தேர்தல் வந்தாலும், அதற்கு துங்கு ரசாலி போட்டியிடுவார் என்ற ஆரூடங்கள் கிளம்பும்.

மகாதீர் 2003-இல் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலக, 2004-இல் நடைபெற்ற அம்னோ தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முன்வந்தார் துங்கு ரசாலி. ஆனால் அப்போது அவருக்குப் போதிய நியமனங்கள் கிடைக்கவில்லை. அப்துல்லா படாவியே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

2018-இல் – தனது 81-வது வயதில் – மீண்டும் அம்னோ தலைவர் பதவிக்குக் குறி வைத்துக் களமிறங்குகிறார் துங்கு ரசாலி!

1987-இல் விட்டதை 2018-ஆம் ஆண்டிலாவது – 31 வருடங்களுக்குப் பிறகு பிடிப்பாரா?

அம்னோ தலைவராக – பிரதமர் துன் மகாதீருடன் மீண்டும் எதிர் அரசியல் நடத்துவாரா?

-இரா.முத்தரசன்