Home வாழ் நலம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை

947
0
SHARE
Ad

murugaiகோலாலம்பூர், மார்ச் 29- கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது முருங்கை. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உடல் சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

முருங்கைக்காய் ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.

#TamilSchoolmychoice

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும்.

இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது. கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, கபம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்த விருத்தி தாது விருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள் காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

விதையில் இருந்து எண்ணை தயாரித்து வாயுப் பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கை வேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.