ஷா ஆலாம் – சிலாங்கூர் மாநிலத்தில், பிகேஆர் கட்சியின் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுகைமி ஷாபி (வயது 50) இன்று திங்கட்கிழமை காலை உடல் நலக் குறைவால் எதிர்பாராதவிதமாக காலமானார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக அஸ்மின் அலி பணியாற்றிய காலத்தில் அவருக்கு அரசியல் செயலாளராக மாட் சுகைமி ஷாபி பணியாற்றியிருக்கிறார்.
அவரது மறைவுக்கு அஸ்மின் அலி தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது மறைவு பிகேஆர் கட்சிக்கும், சிலாங்கூர் அரசாங்கத்திற்கும் பேரிழப்பு என அஸ்மின் அலி வர்ணித்தார்.
கடந்த ஜூன் 26-ஆம் தேதி 56 சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழாவில் மாட் சுகைமி உடல் நலக் குறைவால் கலந்து கொள்ளவில்லை.
அவரது மறைவைத் தொடர்ந்து மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதல் இடைத் தேர்தலாக சுங்கை காண்டிஸ் சட்டமன்றத்துக்கான இடைத் தேர்தல் அமையவிருக்கிறது.
கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இந்த சுங்கை காண்டிஸ் சட்டமன்றம் அமைந்திருக்கிறது.
NEGERI | SELANGOR |
---|---|
DUN | N.49 – SUNGAI KANDIS |
PARTI MENANG | PKR |
MAJORITI UNDI | 12480 |
NAMA PADA KERTAS UNDI | BIL. UNDI |
HANAFIAH BIN HUSIN (PRM) | 76 |
KAMARUZZAMAN BIN JOHARI (BN) | 11518 |
SHUHAIMI HAJI SHAFIEI (PKR) | 23998 |
MOHD YUSOF (PAS) | 7573 |
மே 9 பொதுத் தேர்தலில் 12,480 வாக்குகள் பெரும்பான்மையில் சுங்கை காண்டிஸ் தொகுதியில் சுகைமி வெற்றி பெற்றார்.
அமானா கட்சியின் தலைவரும், தற்காப்பு அமைச்சருமான முகமட் சாபு கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினராக 14-வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அம்னோ கட்சியின் தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடிக்கும் இந்த இடைத் தேர்தல் பெரும் சவாலாக அமையும். தேசிய முன்னணி – அம்னோ சார்பாக இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு தங்களின் செல்வாக்கை நிலைநாட்ட வேண்டிய நெருக்கடியை அம்னோ எதிர்நோக்கியிருக்கிறது.