Home நாடு “சாகிரை நாடு கடத்துவதில் தாமதம் ஏன்? இரகசிய உடன்பாடா?” – இராமசாமி கேள்வி

“சாகிரை நாடு கடத்துவதில் தாமதம் ஏன்? இரகசிய உடன்பாடா?” – இராமசாமி கேள்வி

1494
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை நாடு கடத்துவதில் மத்திய அரசாங்கம் ஏன் இன்னும் தாமதமான – மாறுபாடான போக்கைக் கொண்டிருக்கிறது, இதற்குப் பின்னணியில் ஏதாவது இரகசிய உடன்பாடு இருக்கிறதா? என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி (படம்)கேள்வி எழுப்பியுள்ளார்.

“சாகிர் நாயக் நாட்டிற்குள் ஏதாவது குற்றம் இழைக்க வேண்டும். அதற்குப் பின்னரே நாடு கடத்த வேண்டும் என மத்திய அரசாங்கம் காத்துக் கொண்டிருக்கிறதா? சீனாவின் உய்குர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை எப்படி சீன அரசாங்கம் கேட்டுக் கொண்டவுடன் உடனடியாக அனுப்பினீர்கள்? சீனாவின் ஒரு தொலைபேசி மூலமான கோரிக்கை கிடைத்ததுமே அனுப்பினீர்களே? இலங்கைத் தீவிரவாதிகள் என தமிழ் அகதிகள் சிலரை உடனடியாக விசாரணை ஏதுமின்றி எப்படி இலங்கைக்கு அனுப்பினீர்கள்? “ என அடுக்கடுக்கான கேள்விகளை இராமசாமி எழுப்பியிருக்கிறார்.

“இதுபோன்ற நாடு கடத்தும் விண்ணப்பம் கிடைத்தவுடன் அந்த விண்ணப்பத்தின் உள்ளடக்கத்தைத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, சாகிர் நாயக் நமது நாட்டில் குற்றம் செய்தாரா இல்லையா எனப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது” என்றும் சுட்டிக் காட்டிய இராமசாமி, இதுபோன்ற விவகாரங்களில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நடைமுறை கடைப்பிடிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சாகிர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ள இந்திய அரசாங்கம், பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளையும் சுமத்தியிருக்கிறது என்பதால், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்கள் சாகிர் விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும் என்றும் இராமசாமி வலியுறுத்தினார்.

மலேசியாகினி இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இராமசாமி இந்த விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்.

“ஒரு நாட்டில் குற்றமாகப் பார்க்கப்படுவது மற்றொரு நாட்டிலும் அதே போன்று பார்க்கப்பட வேண்டும். சாகிர் விவகாரத்தில் மலேசியாவின் முடிவை அகில உலகமுமே நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவும் மலேசியாவும் இரகசிய உடன்பாடு எதனையும் கொண்டிருக்கிறதா?” என்றும் இராமசாமி மேலும் கேள்வி எழுப்பினார்.