Home உலகம் அன்வாருக்கு துருக்கியில் அறுவைச் சிகிச்சை

அன்வாருக்கு துருக்கியில் அறுவைச் சிகிச்சை

1009
0
SHARE
Ad
துருக்கி மருத்துவமனையில் அன்வார்

இஸ்தான்புல் – மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து வெளியேறி துருக்கி சென்றடைந்த அன்வார் இப்ராகிமுக்கு அங்கு அவருக்கு முதுகுத் தண்டு பிரச்சனைக்காக சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

துருக்கி செல்லும் முன் ஜூலை 7-ஆம் தேதி ஜாகர்த்தா சென்றடைந்த அன்வார் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் இஸ்தான்புல் சென்ற அன்வார் தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து தனது முகநூல் பக்கத்தில் கீழ்க்காணுமாறு தெரிவித்துள்ளார்:

#TamilSchoolmychoice

“ஜாகர்த்தாவில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் முதுகுத் தண்டு அறுவைச் சிகிச்சைக்காக துருக்கி சென்றடைந்தேன்.

மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது முதுகுத் தண்டு மற்றும் தோள்பட்டை அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான அவசியம் இருக்கிறதா என ஆராயப்பட்டது. அதற்காக, இதயத்தில் அடைப்புகள் ஏதும் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக எஞ்சியோகிராம் (angiogram) என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இருதயம் சம்பந்தமான கோளாறுகள் எதுவும் இல்லை என அந்த நடைமுறைச் சிகிச்சைகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து எனது முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக, எனது உடல் நலத்தை மேம்படுத்துவதற்காக, அறுவைச் சிகிச்சை ஒன்று இஸ்தான்புல் நகரிலுள்ள மெடிபோல் மெகா யுனிவர்சிடி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எனது உடல்நலம் வெகுவாக மேம்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூலை 12) எனது வலது பக்கத் தோள்பட்டையில் ஏற்பட்டிருக்கும் உட்காயங்களுக்காக மற்றொரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

எனக்கான அறுவைச் சிகிச்சைகள் சுமுகமாக நடந்தேற எனக்காக பிரார்த்தனைகள், வாழ்த்துகள் வழங்கியிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”