பெட்டாலிங் ஜெயா -மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் இருந்து வெளியேறி இல்லம் திரும்பினார்.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி துருக்கியிலிருந்து நாடு திரும்பிய பின்னர் தோள்வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அன்வார் தனக்கு சிறந்த சிகிச்சை வழங்கிய மருத்துவ குழுவினர், திறம்படக் கண்காணித்துக் கொண்ட தாதியர், மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த அன்வாருக்கு சில சமூக ஊடகங்கள் கூறியது போல், இருதயக் கோளாறு எதுவும் இல்லை எனவும் அவர் முன்பைவிடத் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவரது துணைவியார் வான் அசிசா தெரிவித்திருந்தார்.
அன்வார் கடந்த சனிக்கிழமை ஜூன் 23-ஆம் தேதி இரவு அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். தோள்பட்டை வலி, முதுகுத் தண்டு வலி காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அவரை மருத்துவமனையில் சந்தித்தவர்களில் பிரதமர் துன் மகாதீர், நிதி அமைச்சர் லிம் குவான் எங்கும் முக்கியமானவர்களாவர்.