கோலாலம்பூர் – சமீப காலமாக பல தரமான மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளியாகி மலேசியத் திரையரங்குகளில் வெற்றிகரமாகப் பவனி வந்து கொண்டிருக்கும் படம் “அச்சம் தவிர்”.
இத்திரைப்படத்தில் டி.எச்.ஆர் ராகாவின் ஏறக்குறைய அனைத்து முன்னணி தொகுப்பாளர்களுடன், பல உள்ளூர் கலைஞர்களும் நடித்துள்ளனர். திரைக்கதை மற்றும் இயக்கத்தை எஸ்.எஸ் விக்னேஸ்வரன் மற்றும் கார்த்திக் ஷாமளன் கூட்டணி பொறுப்பேற்றுள்ளனர். இசை வர்மன் இளங்கோவன். இணை தயாரிப்பு டி.எச்.ஆர் ராகாவின் உதயா.
கதை – திரைக்கதை என்ன?
உயிர் நண்பர்களான உதயா, ஆனந்தா, ‘விகடகவி’ மகேன், எல்வின் மார்டின் மற்றும் புன்னைகை பூ கீதா ஆகியோர் தங்களின் இன்னொரு தோழியின் திருமணத்திற்காக கோலதிரெங்கானுவிற்கு செல்கின்றனர். அவர்கள் செல்லும் வேனின் ஓட்டுனராக பாடகர் ‘ரேபிட்’ மேக்.
அவர்கள் திருமணம் முடிந்து திரும்பி வரும் நேரத்தில் மேலும் இரண்டு பேர் அவர்களோடு கோலாலம்பூருக்கு திரும்பும் சூழ்நிலை. இந்த நிலையில் அவர்கள் வரும் வண்டி பழுதடைய, அந்த வழியாக ஏற்கனவே ஒரு பிரச்சனையோடு ஒரு லோரியில் வந்துக் கொண்டிருக்கும் கானா மற்றும் அவர் குடும்பத்தினரிடம் உதவி கேட்கின்றனர்.
இவர்களின் பாதைகள் சங்கமிக்க, அடுத்து என்னென்ன நடக்கிறது என்பதை திகில் கலந்த நகைச்சுவையுடன் சொல்லியிருக்கின்றனர் விக்னேஸ்-கார்த்திக் கூட்டணி.
முதல் பாதி முழுவதும் நகைச்சுவை, இரண்டாம் பாதி திகில் என வெகுஜன ரசிகர்கள் விரும்பும் ஜனரஞ்சக திரைப்பட ஃபார்முலாவை கச்சிதமாக படக்குழுவினர் கையாண்டுள்ளனர். அதில் ஓரளவுக்கு வெற்றியும் அடைந்துள்ள்னர் என்றே சொல்ல வேண்டும். தோழியின் கல்யாண வீட்டில் நடக்கும் காமெடி காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.
இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் அனைத்து நடிகர்களின் நடிப்பு. சைவத்திலும் உயர் சைவமாக கருதப்படும் “Vegan” உணவுகளை மட்டும் உண்ணும் குபேன், தன் காதலை சொல்ல ’திக்கும்’ ’விகடகவி’ மகேன், அவர் காதலுக்கு அவ்வப்போது மொக்கை ஐடியாக்கள் கொடுக்கும் எல்வின், தெலுங்கு சினிமா பிரியரான உதயா, உதயாவின் காதல் உணர்வை அடிக்கடி பாராட்டி, “கள்ளன்!” என்று மெய்சிலிர்க்கும் ஆனந்தா, பிரபல மலேசிய பாடகர் டார்க்கீயின் தீவிர ரசிகரான ரேபிட் மேக் என்று அனைவருக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள்.
இப்படி ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பதன் மூலம் இயக்குனர்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றனர். புன்னகை பூ கீதாவின் சற்று மாறுபட்ட கதாபாத்திர(ங்களின்) படைப்பும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த கானாவை இம்முறை முழுக்க முழுக்க சீரியசான கதாபாத்திரத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அவர் மனைவியாக வரும் ரேவதி அவருக்கு இணையான நடிப்பை வழங்கியுள்ளார்.
இதற்கு முன் வெளிவந்த மலேசிய திரைப்படங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது இத்திரைப்படத்தின் தொழில்நுட்பப் பணிகள் நாம் வழக்கமாக பார்க்கும் இந்திய – தமிழ்த் திரைப்படங்களுக்கு இணையாகவே உள்ளவது. தெளிவான ஒளி மற்றும் ஒலிப்பதிவு, நேர்த்தியான படத்தொகுப்பு, கவனத்தை சிதறடிக்காத பின்னணி இசைக் கோர்ப்பு, கலை இயக்கம் என அனைத்து துறைகளிலும் நம்மவர்களின் பங்களிப்பு சிறப்பாகவே உள்ளது. சில இடங்களில் மட்டும் ஒளிப்பதிவில் லேசாக எட்டிப்பார்க்கும் காட்சிகளின் கூர்மையற்ற-தெளிவற்ற தன்மை (out of focus) – தவிர்க்க சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்!
இத்திரைப்படத்தில் தடித்த சிகப்பு பேனாவில் சுட்டிக்காட்டும் அளவுக்கு குறைகள் ஒன்றும் இல்லை. இருப்பினும் இயக்குனர்கள் கதைக்குள் நுழைய எடுத்துக்கொண்ட நேரத்தை சற்று குறைத்துக் கொண்டிருக்கலாம். லோரி ஓட்டுனரான கானாவின் பின்புலம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் அதில் அழுத்தம் சற்று குறைவாகவே இருக்கிறது.
8 பேர் இருக்கும் கும்பல் வெறும் 4 பேர் இருக்கும் (அதிலும் இரண்டு சிறுவர்கள்) குடும்பத்திற்கு பயப்படுவது ஏன்?. இரவில் நடுரோட்டில் மாட்டிக்கொண்டிருக்கும் வேளையில், அனைவரும் கானாவின் லாரியில் ஏறிச்செல்ல, இருவர் மட்டும் “Truth or Dare” விளையாட்டுக்காக அங்கேயே இருப்பது, கதைக்காக கொண்டுவரப்பட்ட ஒரு லாஜிக் மீறல் என்றாலும் அது நமக்கு சற்று அதிகமாகவே உறுத்துகிறது.
இதுபோன்ற சிறு சிறு குறைகள் ஆங்காங்கே தென்பட்டாலும், படம் முடிந்து வெளியே வரும்பொழுது இரசிகர்கள் எந்த ஏமாற்றமுமின்றி மன நிறைவுடன் வெளியே வருகின்றனர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
எனவே, தொலைகாட்சியில் வரும் வரை காத்திருக்காமல் இத்திரைப்படத்தை சீக்கிரமே வெள்ளித்திரையில் குடும்பத்துடன் சென்று பாருங்கள். இது போன்ற தரமான திரைப்படங்களின் வணிக வெற்றியே, மலேசிய தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல வழி வகுக்கும்.