Home நாடு “60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு

“60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு

970
0
SHARE
Ad

கோலாலம்பூர் – லெபனான் நாட்டிலுள்ள ஒரு பிரபல நகை விற்பனை நிறுவனம் மலேசியா ரிங்கிட் மதிப்பில் சுமார் 60 மில்லியனுக்கு ரோஸ்மா வாங்கிய நகைக்கான தொகையைச் செலுத்தவில்லை எனக் கூறி வழக்கு தொடுத்திருப்பதைத் தொடர்ந்து அவ்வாறு நகைகள் எதனையும் தான் வாங்கவில்லை என ரோஸ்மா மறுத்திருக்கிறார்.

14.79 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 59.831 மில்லியன்) நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் நகை வாங்கியதாகவும், அந்த நகைக்கான தொகையை இன்னும் செலுத்தவில்லை என்றும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் மூலம் கடந்த ஜூன் 26-ஆம் தேதி குளோபல் ராயல்டி டிரேடிங் என்ற அந்த நிறுவனம் வழக்கு தொடுத்திருக்கிறது.

இந்தத் தொகைக்கு மொத்தம் 44 நகைகளை குளோபல் ராயல்டி டிரேடிங் என்ற அந்த நிறுவனம் ரோஸ்மாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

“குளோபல் ராயல்டி டிரேடிங் ரோஸ்மாவுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் வழக்கில் பட்டியலிட்டிருக்கும் நகைகள் எங்களின் கட்சிக்காரர் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு  பார்வையிடுவதற்காக அனுப்பப்பட்டது உண்மைதான். ஆனால் அந்த நகைகளில் எதனையும் அவர் வாங்கவில்லை. எனவே, திருடப்பட்ட பணத்தின் மூலமாக அந்த நகைகள் வாங்கப்பட்டன எனப் பரப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதோடு அவை அடிப்படையும் அற்றவை. கூடியவிரைவில் இதன் தொடர்பில் எங்களின் கட்சிக்காரரின் நற்பெயரையும் நலனையும் பாதுகாக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என ரோஸ்மாவின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் டத்தோ கே.குமரேந்திரன் மற்றும் டத்தோ கீதன் ராம் தெரிவித்தனர்.