கோலாலம்பூர் – லெபனான் நாட்டிலுள்ள ஒரு பிரபல நகை விற்பனை நிறுவனம் 14.79 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 59.831 மில்லியன்) நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் நகை வாங்கியதாகவும், அந்த நகைக்கான தொகையை இன்னும் செலுத்தவில்லை என்றும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.
இந்தத் தொகைக்கு மொத்தம் 44 நகைகளை குளோபல் ராயல்டி டிரேடிங் என்ற அந்த நிறுவனம் ரோஸ்மாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
மே மாதத்தில் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆபரணங்களில் இந்த நகைகளும் அடங்கும்.
கடந்த ஜூன் 26-ஆம் தேதி அந்நிறுவனம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைப் பதிவு செய்திருக்கிறது.
இதன் தொடர்பிலான ஆவணங்களை தாங்கள் பார்வையிட்டதாக மலேசியாகினி இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரோஸ்மா வாங்கியுள்ள இந்த நகைகளில் வைர கழுத்து அட்டிகைகள் (நெக்லெஸ்), காதணிகள்,மோதிரங்கள், கைவளையங்கள், தலைக் கிரீடங்கள் ஆகியவையும் அடங்கும் என்றும் இவற்றின் விலை 124,000 அமெரிக்க டாலர் முதல் 925,000 அமெரிக்க டாலர் வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.