Home உலகம் பிரான்ஸ் 4 – குரோஷியா 2 – கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்

பிரான்ஸ் 4 – குரோஷியா 2 – கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்

1422
0
SHARE
Ad

மாஸ்கோ – ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டத்தில் பிரான்சும், குரோஷியாவும் மோதின. இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிவுற்றபோது பிரான்ஸ் 2-1 கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.

பிரான்சின் முதல் கோல் 18-வது நிமிடத்தில் புகுத்தப்பட்டது. பிரான்சின் கிரீஸ்மென் அடித்த பந்தை குரோஷியாவின் மாண்ட்சுகிக் தலையால் முட்டி அதனை சொந்த கோலாக்கினார்.

பின்னர் 28-வது நிமிடத்தில் குரோஷியாவின் பெரிசிக் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை இரு குழுக்களுக்கும் இடையில் சமநிலைக்குக் கொண்டு வந்தார். தொடர்ந்து 38-வது நிமிடத்தில் பிரான்சுக்குக் கிடைத்த பினால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கிரீஸ்மென் ஒரு கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் பிரான்ஸ் முன்னணியில் இருந்தது.

#TamilSchoolmychoice

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பிரான்சின் போக்பா 59-வது நிமிடத்திலும் எம்பாப்பே 65-வது நிமிடத்திலும் கோல் அடித்து பிரான்சை 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணிக்குக் கொண்டு வந்தனர்.

பிரான்சின் கோல் கீப்பர் செய்த தவறு ஒன்றினால், குரோஷியாவின் மாண்ட்சுகிக் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க 4-2 என்ற கோல் எண்ணிக்கையில் பிரான்ஸ் முன்னணி வகித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து உலகக் கிண்ணத்தை அண்மையக் காலத்தில் இரண்டாவது முறையாக வென்ற நாடாக பிரான்ஸ் திகழ்கிறது. 1998-ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் தற்போது மீண்டும் கிண்ணத்தை வெற்றி கொள்கிறது.