Home நாடு புதிய மலேசியா! புதிய நாடாளுமன்றம்! தொடங்குகிறது…

புதிய மலேசியா! புதிய நாடாளுமன்றம்! தொடங்குகிறது…

1515
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புதிய மலேசியா! இதுதான் 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியேற்றிருக்கும் துன் மகாதீர் தலைமையிலான அரசாங்கத்தின் முத்திரை அடையாளமாக முன்வைக்கப்படும் சுலோகம்!

புதிய மலேசியாவின் புதிய நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (ஜூலை 16) ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன், வித்தியாசங்களுடன் தொடங்குகிறது.

முதல் கட்டமாக ஊழல் தடுப்பு ஆணையம், தேர்தல் ஆணையம் போன்ற பல முக்கிய அரசாங்க அமைப்புகள் பிரதமர் துறையிலிருந்து பிரிக்கப்பட்டு நேரடியாக நாடாளுமன்றத்தின் பார்வையின் கீழ் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த காலங்களில் நாடாளுமன்றம் தொடங்கிய தேதிகளைக் குறிக்கும் வரைபடம்
#TamilSchoolmychoice

புதிய நாடாளுமன்ற அவைத் தலைவராக முன்னாள் நீதிபதி ஒருவர் – முகமட் அரிப் – முன்மொழியப்பட்டிருக்கின்றார. அரசாங்கத்தின் ஊதுகுழலாக – எதிர்க்கட்சிகளின் வாதங்களை புறக்கணிக்கும் – அனுமதிக்க மறுக்கும் – நாடாளுமன்ற அவைத் தலைவரையே இதுவரை கண்டிருந்த மக்கள் இனி வித்தியாசமான, நடுநிலையான அவைத் தலைவர் ஒருவரைக் காணலாம்.

அன்று எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளாக குரல் கொடுத்தவர்கள் இன்று அமைச்சர்களாக – துணையமைச்சர்களாக – நாடாளுமன்றத்தை இயக்கப் போகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு ஆதிக்கம் செய்தவர்கள் – 1எம்டிபி விவகாரம் முதற்கொண்டு – எதையும் விவாதிக்கக் கூடாது என்று தடுத்து நிறுத்தியவர்கள் – இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொள்ளப் போகிறார்கள்.

ஆரோக்கியமான விவாதங்கள் – இனி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் – ஏன் அந்த விவாதங்கள் நேரலையாகக் கூட தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன!

பொய்ச் செய்திகள் சட்டம், தேச நிந்தனைச் சட்டம் போன்ற மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தும், உரிமைகளை மறுக்கும் பல சட்டங்கள் இரத்து செய்யப்படும் – அல்லது திருத்தியமைக்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

இப்படியாக புதிய மலேசியாவின் புதிய நாடாளுமன்றம் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம்!

புதிய நாடாளுமன்றத்தை மாமன்னர் இன்று தொடக்கி வைத்து உரையாற்றும் போது – அவரது அரசாங்கக் கொள்கை உரையில் மேலும் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்