கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது வழக்கமான கட்டணங்களைக் கூட கட்ட முடியாமல் தவிக்கிறேன் என அவர் கடுமையாகக் குறை கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது அவரது வங்கிக் கணக்கு மீண்டும் செயல்படும் வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. எனினும், நஜிப் தொடர்புடைய 1எம்டிபி விசாரணையின் தொடர்பில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அந்த வங்கிக் கணக்குகளின் விவரங்கள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில் நஜிப் தலைமைத்துவத்தின்போது, 2013 பொதுத் தேர்தலை முன்னிட்டு நஜிப்பின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல கோடி ரிங்கிட் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுக் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை மலேசியாகினி இணைய ஊடகம் வெளியிட்டிருக்கிறது.
இதில் 20,550,000 ரிங்கிட் மஇகாவுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள விவரத்தை மலேசியாகினி குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் பணம் வழங்கப்பட்ட 2013 பொதுத் தேர்தல் காலகட்டத்தின்போது டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு மஇகா தேசியத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அம்னோவுக்கு மட்டும் 417,414.000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் அனைத்தும் தனக்கு நன்கொடையாக வந்தவை என நஜிப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அந்தப் பணம் 1எம்டிபி மூலம் நடத்தப்பட்ட ஊழல் விவகாரங்களின் மூலம் பெறப்பட்டவை என புலனாய்வு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
அடுத்து: