நியூயார்க் – பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் சர்க்கர்பெர்க் எந்த நிறுவனத்தின் மூலம் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்தாரோ அதே பேஸ்புக் நிறுவனத்தின் மூலம் தனது செல்வத்தில் 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒரே நாளில் குறைந்து போகும் அதிர்ச்சியையும் நேற்று வியாழக்கிழமை அனுபவித்தார்.
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிநிறுவனங்களுக்கு விற்பனை செய்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் மீதிலான நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே குறைந்து வருகின்றது. அதன் வணிக அமைப்பு முறை இனியும் வெற்றிகரமாக செயல்பட முடியுமா என்ற கேள்விகளும் வணிக வட்டாரங்களில் எழுந்துள்ளன.
இந்நிலையில் நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 19.6 விழுக்காடு வரையில் சரிவு கண்டன. இதனால் அந்நிறுவனத்தின் மதிப்பில் சுமார் 124 பில்லியன் அமெரிக்க டாலர் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாகவே, மார்க் சர்க்கர்பெர்க்கின் சொந்த சொத்து மதிப்பும் சரிவு கண்டது. அவரது சொத்து மதிப்பு பேஸ்புக் விலை வீழ்ச்சியின் அடிப்படையில் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர் வரை குறைந்துள்ளதாக அமெரிக்க சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.