புத்ரா ஜெயா – கசானா நேஷனல் பெர்ஹாட் எனப்படும் தேசிய முதலீட்டு நிதி நிறுவனம், எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்குகளில் இருந்து தடம் புரண்டு வேறு பாதையில் சென்றுவிட்டது என அடிக்கடி குறை கூறி வந்த துன் மகாதீர், தற்போது அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை தானே ஏற்றிருக்கிறார்.
கசானாவின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மகாதீர் நியமிக்கப்பட்டிருக்கும் வேளையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி வாரிய இயக்குநராக நியமனம் பெற்றிருக்கிறார்.
இவர்களைத் தவிர, பெட்ரோனாசின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹசான் மரிக்கான், டாக்டர் சுக்டேவ் சிங் மற்றும் கோ சிங் யின் ஆகியோர் வாரிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த அனைத்து நியமனங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வேளையில் நிர்வாக இயக்குநர் பொறுப்புக்கு இதுவரையில் யாரும் நியமிக்கப்படவில்லை. பின்னர் ஒரு நாளில் நிர்வாக இயக்குநர் நியமிக்கப்படுவார்.
கடந்த ஜூலை 26-ஆம் தேதி கசானா நேஷனலின் ஒட்டு மொத்த இயக்குநர்களும் தங்களின் பதவிகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அந்த அமைப்பை உருமாற்றும் பணிகளின் முதல் கட்டமாக இந்தப் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டன.
பாரம்பரியமாக, பிரதமர் பொறுப்பு வகிப்பவரே கசானாவின் தலைமைப் பொறுப்பையும் வகித்து வந்திருக்கிறார்.