Home நாடு “இன, சமய வாதங்களை எதிர்க்க பிகேஆருக்கு வாக்களியுங்கள்” சேவியர்

“இன, சமய வாதங்களை எதிர்க்க பிகேஆருக்கு வாக்களியுங்கள்” சேவியர்

1004
0
SHARE
Ad

Xavier Jayakumar Sri Andalas State Assemblymanகிள்ளான் – “சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலில் பி.கே.ஆரின் வேட்பாளர் சவாவி அகமட் முக்னியின் வெற்றி நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த 60 ஆண்டுகளாக இன, சமயத் தீவிர வாதச் சக்திகளின் பிடியிலிருந்து இந்நாட்டை மக்கள் விடுத்தது ஒரு சரியான முடிவு என்பதை மறு உறுதிப்படுத்தும் தீர்ப்பாக இத்தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும்” என  நீர், நிலம், இயற்கை வள அமைச்சரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அறிக்கையொன்றின்வழி தெரிவித்துள்ளார்.

“கடந்த தேர்தலில் இன மதத் தீவிர வாதத்தையும், ஊழலையும் எதிர்த்து மக்கள் கொடுத்த மரண அடியிலிருந்து அம்னோ இன்னும் பாடம் படிக்கவில்லை. இந்நாடும் மக்களும் குறிப்பாகச் சிறுபான்மை மக்களான இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது இத்தேர்தல் வெற்றி. அந்த வெற்றியின் காரணமாக, நாடு ஒற்றுமையாக முன்னேற புதிய பாதை பிறக்கும்” என பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.

“நாட்டு மக்களின் பொருளாதார, கல்வி,சமூக மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் அம்னோவின் பிரித்தாளும் யுக்தியில் சிக்கிச்  சிதைய வேண்டும் என மக்கள் சிந்திக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்ட அவர் இந்தியர்களின்  பின்னடைவுகளுக்கும், துன்பங்களுக்கும், தேசிய முன்னணியின் முதுகெலும்பான அம்னோவே முக்கியக் காரணம் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

“தேசிய முன்னணி வேட்பாளரைத் தோற்கடிப்போம்”

“14வது பொதுத் தேர்தலில் பாரிசானின் மக்களை இன, சமய ரீதியாகப் பிரித்தாளும் கொள்கைக்குக் கிடைத்த தோல்வி அக்கட்சிக்குப் பாடம் புகட்டியிருக்க வேண்டும். அதன் தீவிர இனச் சமய வாதம் மற்றும் சுரண்டல், ஊழல் கலாச்சாரத்திலிருந்து அது விடுபடும் என்று எதிர்பார்த்த மக்களுக்குப் பெரிய ஏமாற்றமாக அமைந்து வருகிறது அம்னோவின் இன்றைய செயல்பாடுகள். முன்னாள் பாரிசான் அரசாங்கத்தின் முதுகெலும்பான அம்னோ தன்னை மேலும் அதி தீவிரவாத இஸ்லாமிய மற்றும் இனவாதக் கட்சியாக மாற்றி வருவதைத் தடுக்கப் பாரிசான் அம்னோ வேட்பாளர் டத்தோ லோக்மான் நூர்அடாமின் தோல்வியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இத்தொகுதி வாக்காளர்களுக்கு உண்டு” என்றும் சேவியர் குறிப்பிட்டார்.

“சாஹிட் ஹமிடி துணைப் பிரதமராக இருந்தபொழுது மலேசிய இந்தியர்களுக்கு எந்தச் சலுகையும் காட்டப்படாது என்று கூறியதுடன், இந்தியர்களுக்கு இலவசச் சவப்பெட்டி தருவதாகக் கூறியது எல்லாம் இந்தியர்களைக் கிள்ளுக்கீரைகளாக எண்ணும் இவரின் மனப்பான்மை எப்படிப்பட்டது என்பதையும் எடுத்துக் காட்டியது. அப்படிப் பட்டவரை அம்னோ அதன் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதை நாம் ஆழ்ந்த கவலையுடன் கவனிக்க வேண்டும். அம்னோ வேட்பாளருக்கு ஆதரவாகப் பாஸ் இஸ்லாமியத் தீவிர வாதக் கட்சியும் இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்திருந்தது. இவை அனைத்தும், இன, சமய ரீதியான கூட்டணிகளின் உறைவிடமே அம்னோதான் என்பதை நமக்கு உணர்த்துகிறது” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கும் சேவியர், “அப்படிப்பட்ட  ஓர் இயக்கத்துக்கு இந்தியர்கள் வாக்களிக்கலாமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

“மலாய்க்காரர்களின் உரிமைக்காகத் தான் போட்டியிடுவதாகப் பிரச்சாரம் செய்து வரும் பாரிசான்-அம்னோ வேட்பாளர் டத்தோ லோக்மான் நூர் அடாமிடம் இந்திய வாக்காளர்கள் முன்வைக்க வேண்டிய முக்கியக் கேள்வி, மலாய்க்காரர்கள் உரிமைகளை விட மற்ற இனங்களின் உரிமைகள் எவ்வகையில் மேம்பட்டுள்ளது என்பதாகும்” என்றும் சேவியர் தெரிவித்திருக்கிறார்.