Home உலகம் “மொகிதின் நலமுடன் விரைவில் நாடு திரும்புவார்” – கோ சோக் தோங்

“மொகிதின் நலமுடன் விரைவில் நாடு திரும்புவார்” – கோ சோக் தோங்

1259
0
SHARE
Ad

சிங்கப்பூர் – இங்கு சிகிச்சை பெற்று வரும் உள்துறை அமைச்சரும் பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நல்ல முறையில் குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூடிய விரைவில் நாடு திரும்புவார் என்றும் அவரை மருத்துவமனையில் சந்தித்த பின்னர் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் தோங் தெரிவித்திருக்கிறார்.

“மொகிதினின் தலைமைத்துவம் இன்னும் மலேசியாவுக்குத் தேவைப்படுகிறது. அவர் நல்ல முறையில் நாடு திரும்ப வாழ்த்துகிறேன்” என்றும் அவர் மேலும் கூறினார்.

தனது பழைய நண்பரான மொகிதினைச் சந்தித்து அளவளாவியதாக கோ சோக் தோங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். “மொகிதின் ஜோகூர் மந்திரி பெசாராக இருந்த காலத்தில் நான் சிங்கப்பூர் பிரதமராக இருந்தேன். அந்த காலகட்டத்தில் சிங்கை – ஜோகூர் இடையிலான நல்லுறவை வளர்க்க நாங்கள் பெருமளவில் பாடுபட்டோம். டுரியான் பழங்களின் பரிமாறலுடன் ஹரிராயா விருந்துபசரிப்பில் கலந்து கொள்ள நாங்கள் ஜோகூர் மந்திரி பெசார் இல்லம் செல்வோம். அதே போன்று சீனப் பெருநாள் விருந்துபசரிப்புகளில் கலந்து கொள்ள மொகிதின் தனது குழுவினருடன் சிங்கப்பூர் இஸ்தானாவுக்கு வருவார். அந்த பழைய இனிமையான சம்பவங்களை நாங்கள் எங்கள் சந்திப்பின்போது நினைவு கூர்ந்தோம்” என்றும் கோ சோக் தோங் பதிவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கணையத்தில் ஏற்பட்ட கட்டி ஒன்றை அகற்றுவதற்காக சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மொகிதின் யாசின் தற்போது அங்கு தங்கி தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். மொகிதினுக்குப் பதிலாக உள்துறை அமைச்சுப் பொறுப்புகளை பிரதமர் துன் மகாதீர் வகித்து வருகிறார்.