ஒட்டாவா – மனித உரிமைகளுக்காகப் போராடிய சில பெண் போராட்டவாதிகளை சவுதி அரேபியா கைது செய்ததைக் கண்டித்து அண்மையில் கனடா அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி சவுதிக்கான கனடா தூதரை நாட்டிலிருந்து வெளியேற்றியதோடு, இனி கனடா நாட்டுடன் அனைத்து புதிய வணிகங்களும், முதலீடுகளும் முடக்கப்படுவதாக சவுதி அரசாங்கம் அதிரடியாக அறிவித்திருக்கிறது.
எனினும் கனடாவில் வெளிநாடுகளிலும் மனித உரிமைகளுக்காக கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும், பெண் உரிமைகள் என்பது மனித உரிமைகளில் அடக்கம் என்றும் கனடா நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான நடப்பு வணிக உறவுகள் பாதிக்கப்படுமா என்பது தெரியவில்லை.
சவுதிக்கும் கனடாவுக்கும் இடையில் தற்போது 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வணிகங்கள் நடைபெற்று வருகின்றன. 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் ஒன்றும் இருநாடுகளுக்கும் இடையில் இருந்து வருகிறது.